யாழ்.ஜீவநதி பற்றிய பார்வையும், செங்கை ஆழியான் சொல்லும் "தமிழ்நாட்டு அப்ளாசும்"


யாழில் இருந்து ஜீவநதி என்னும் பெயரில் கலை இலக்கிய ஏடு ஒன்று வெளிவரத் தொடங்கியுள்ளது. இரு மாதங்களிற்கு ஒரு முறை வரும் இந்த சஞ்சிகையின் இரண்டாவது சஞ்சிகை கிடைத்தது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கும், மருந்து பொருட்களிற்கும், கப்பலை எதிர்பார்த்துக்கொண்டும், மாலை ஆறு மணிக்குள் அடங்கி போகின்ற நாட்களையும், கொலைகள் நிறைந்த பகல்களையும் கொண்ட யாழில் இருந்து இன்றைய சூழ்நிலையில் இந்த “ஜீவநதியின்” வருகை ஆச்சரியத்திற்குரியதொன்று. ஒரு சில மாதங்களிற்கு முன்னர் படித்த செய்தியில் உதயன் நாளிதழ் வெளியிட ஏற்பட்ட தாள்களின் தட்டுப்பாட்டால் குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டு கடை வாசலில்களில் ஒட்டப்பட்டு படிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு இருந்தது. ஒரு பிரதான பத்திரிகையொன்றிற்கே இந்த நிலை ஏற்படுகின்றதை பார்த்துக் கொண்டு இப்படியான சஞ்சிகையை தொடக்குவதற்கு அவர்களிற்கு ஏற்பட்ட துணிவை நினைக்க நினைக்க மீண்டும் பாராட்ட தோன்றுகின்றது. அவர்களிற்கு அந்த சஞ்சிகையை விலை கொடுத்து வாங்குவதையும், இன்னும் ஐந்தாறு பேருக்கு அறிமுகத்தை செய்வதை தவிர பெரிதான உதவி ஒன்றையும் நாங்கள் இப்போது செய்து விட முடியாது தானே.

யாழ்ப்பாணத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஏராளம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதும் இதே கஸ்டங்கள் இருந்தன. ஆனால் உயிருக்கு பயம் குறைவாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இடைவேளையில் வகுப்பறைக்கே நெம்பு, நங்கூரம், சாளரம், வரதரின் அறிவுக்களஞ்சியம், விளக்கு, வெளிச்சம், உலகஉலா என பல இதழ்கள் வரும். புது இதழ்களை தேடி நாங்கள் போவதில்லை. அது வகுப்பறைக்கே வரும். இப்போது எப்படியோ தெரியாது.

ஜீவநதியும் நிறைவாக வந்திருக்கின்றது. கவிதைகளை சோ.ப, கல்வயல்.வே.குமாரசாமி, த.ஜெயசீலன், ச.நிரஞ்சனி, எழில்வேந்தன், த.அஐந்தகுமார்,ஏ. இக்பால், இ.சு.முரளிதரன், யோ. யோகானந்தி ஆகியோர் எழுதி இருக்கின்றார்கள். இவை மரபு, புதுக்கவிதைகள் என பலவாயும் வந்திருக்கின்றது. த. அஐந்தகுமாரின் சொற்கள் பற்றி இரு கவிதைகள் என்னை கவர்ந்தது.

சொற்கள் பற்றிய இரு கவிதைகள்.

எச்சில் விழுங்கு
இன்னும் விழுங்கு
தொண்டைக் குழிக்குள்
துள்ளிக் குதித்து
எட்டாது களைக்கும்
சொற்களின் கவலை
நாளெல்லாம்
உன் முகத்தில்
எழுதப்பட்டு கிடக்கட்டும்.
----------------------------------------


என்னைச் செரிக்கும்
வலிகளின் நிமித்தம்
சொற்கள் வரமுடியாது
மௌனம் பிசைகிறது
புகைச்சுருளாய்
காற்றைத் தழுவி நிற்கும்
தனித்து விடப்பட்ட
‘சொற்கள்’
சுயமைத்துனத்தின்
அந்தரங்கமாய்
‘என்னோடு’
மட்டுமே புரள்கின்றது.

சிறுகதைகளை அநாதரட்சகன், மயூரரூபன், குந்தவை ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். மேலோட்டமாக மூன்று சிறுகதைகளும் நன்றாகவே இருக்கின்றன. இருந்தும் இவை பற்றிய சில எண்ணங்கள் எனக்குண்டு. அநாதரட்சகனின் ‘மனச்சிறை’ என்னும் சிறுகதை கணவனை தொலைக்கும் மனைவியின் எண்ணங்களும், இறுதியில் மாமியார் அவளை ராசியில்லாதவள் என்றும், அவள் வந்த பிறகே தன் மகன் தொலைந்தாக பேசுவதாகவும் முடிகின்றது. இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த சிறுகதையில் ஒரு விஷயம் கணவன் தொலைவது. யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு எத்தனை இளைஞர்களைத் தொலைக்கின்றது. அவர்களின் மனைவி, குழந்தை, உறவுகளின் நிலை எப்படி இருக்கும்?

இவர்களின் பிரதிநிதியாய் கதையின் நாயகி வருகிறாள் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால் கதை அவள் பெண் என்ற ரீதியில் எழும் இன்னொரு புதிய பிரச்சனைச் சொல்லி முடிகின்றது.

உண்மையில் இரண்டுமே பெரிய விஷயங்கள். ஒரு மனிதனின் தொலைவு எவ்வளவு பெரிய விஷயம்? பல வருடங்கள் அந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் ஒரு சில மணிநேரங்களில் காணாமல் போவதும், அதற்கு எந்தச் சலசலப்பும் இல்லாது சமூகம் அடுத்த நாளை நோக்கி இருக்க, ஒரு தனி மனுசியாய் அவள் எதிர்கொள்ளும் வேதனையின் உச்சம் இந்த கதையில் இல்லை எனவே நினைக்கிறேன். சில வேளை கதை ஆசிரியருக்கும் அது அங்கு ஒரு சாதாரணமாய் போனதின் விளைவாய் அதன் வீரியம் சரியாக எழுத்தில் வரவில்லையே என்னவோ.

மயூரரூபனின் வைரவர் உலா என்னும் சிறுகதையின் நடை நன்றாக இருக்கின்றது. ஆனால் இராணுவத்தினரை நாய் என்றும் பேய் என்றும், மாடு என்றும், வைரவர் என்றும் உருவகப்படுத்துவது கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் வன்னியில் இருந்து எழும் இலக்கியங்களில் காணப்படும் ஒரு போக்கு. அது வாசிக்கையில் ஒரு வித சலிப்பை தர முனைக்கின்றது. ஆனால் மயூரரூபன் இதே நடையில் இன்னும் நல்ல சிறுகதைகளை தரமுடியும்.

குந்தவையின் "சொல்லமாட்டாளா?" என்னும் சிறுகதை நன்றாகவே இருந்தது. சில வரிகளிற்கான இடைவெளிகள், மேற்கோள் குறிகள் சரியான இடத்தில் இடம்பெறாமை வாசிக்கையில் சிறு கரைச்சல் தரப்பார்க்கின்றது. அது ஒரு அச்சகப் பிழை.

கட்டுரைகளை செ.திருநாவுக்கரசு, அம்மன்கிளி முருகதாஸ், மௌனகுரு, தெணியான், கி.நடராசா, பரணி, க.திலகநாதன், பா. அகிலன், லம்போதரன் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள்.

மௌனகுருவின் கூத்துக்கலை செயற்பாடுகளில் ஒரு சாஸ்திரிய இசைக்கருவியான மிருதங்கத்தை இசைத்தவரான இரத்தினம் மாஸ்டர் பற்றிய கட்டுரை நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒன்று. அதே போல் தெணியான், பா.அகிலன், லம்போதரன், என ஏனைய கட்டுரைகளும் கவனிக்கத்தக்கவை.

நேர்காணலில் செங்கை ஆழியானின் நேர்காணல் வந்திருக்கின்றது. கேள்விகளும் கனமானவையே. இங்கே ஒரு கேள்வியும் பதிலும் தருகின்றேன். எனக்கு செங்கை ஆழியான் என்ன சொல்லுகிறார் என்று சரியாக விளங்கவில்லை.

கேள்வி - இலக்கிய உலகில் புலம்பெயர் இலக்கியங்கள் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. புலம்பெயர் இலக்கியம் குறித்துத் தங்கள் கருத்தென்ன?

புலம் பெயர் இலக்கியங்கள் இன்று முதன்மை பெற்று வருகின்றன. புலம் பெயர் இலக்கியங்கள் இருவகையான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ஆரம்ப கால இலக்கியங்கள் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் இருந்தன. ஈழத்தில் தம் அனுபவங்களையும் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவை பேசின. பின்னர் அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளரின் குறிப்புக்களாக இருந்தன. ஈழத்தின் துயரங்களை இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில் வாழாமல் பதிவு செய்ய முடியாது. பட்டினி தேசமாக மாறிவிட்ட யாழ்ப்பாணத்தின் துயரங்கள் தெரியுமா? தீ விட்டெரியும் கிழக்கின் அவலங்களைக் கற்பனையில் காணமுடியுமா? நாசி முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படும் அவலங்களை அனுபவிக்க முடியுமா? வீதிகளில் அவமே செத்துக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்கள் வெளியிடும் கனவுகளை உணர முடியுமா?
இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான் கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்து தமிழ்நாட்டின் அப்ளாஸைப் பெறப்போகிறீர்கள்? அவை ஈழத்து தமிழ் இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள்.அது முத்துலிங்கத்திற்கும் பொருந்தும் அதேபோல எஸ்.பொன்னுத்துரை, வி. கந்தவனம், குறமகள், அரவிந்தன், ஷோபா சக்தி, ஜெயபாலன், சேரன், ஆழியாள் முதலான தமிழ் புலம் பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும். புதிய படைப்பாளிகள் அவர்களில் பலர் இன்று தாம் வாழ்கின்ற நாட்டில் அனுபவிக்கும் துயரங்களை எழுதி வருகின்றார்கள். எங்களுக்குப் பரிச்சயமில்லாத களமாக அவையுள்ளன. நெஞ்சைப் பிடித்துக் கொள்கின்றன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற பரம்பரையும் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வரும். வருவது அந்தந்த நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக அமையும்.
ஜீவநதியின் தொடர்புகளுக்கு.
தொலைபேசி
0094775991949
0094776991015
தொலைநகல்
0094212263206
மின்னஞ்சல்
முகவரி
கலை அகம்
சாமணந்தறை
ஆலடிப்பிள்ளையார் வீதி
அல்வாய்
யாழ்ப்பாணம்

நிலக்கிளியும், காட்டுக்கதைகள் கொஞ்சமும்


அண்மையில் கானாப் பிரபாவின் வலைப்பதிவில் “நிலக்கிளி” பாலமனோகரனது பேட்டியை படித்த பின் வாய்த்தால் நிலக்கிளி நாவலை படிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நிலக்கிளி என்பது உயரப் பறக்காத , நிலத்தோடு அண்டிய பொந்துகளில் வாழும் ஒரு வகை கிளியினம் என பாலமனோகரன் அவரது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது, கதை தான் வாழ்ந்த தண்ணிமுறிப்பு கிராமத்தை களமாக கொண்டது என்பதும் என்னை கவர்ந்தது. ஏனெனில், காடு பற்றி அம்புலிமாமாக்களிலும், பாலமித்ராக்களிலும் மாத்திரமே அறிந்திருந்திருந்த என்னை அநுவை. நாகராஜனின் “காட்டில் ஒரு வாரம்” என்னும் நூல் இன்னும் அது பற்றிய சுவாரசியத்தை அதிகமாக்கின. "காட்டில் ஒரு வாரம்" நூல் சிறுவயதில் காட்டில் தொலையும் ஒரு சிறுவன் மான்கூட்டத்துடன் சேர்ந்து வளர்வதும், பின் அங்கு காட்டில் விடுமுறை கொண்டாட வந்த அவர்களது சகோதரர்களால் அவன் கண்டு பிடிக்கப்படுவதுமான கதையை கொண்டது.




அதே அனேக அம்புலிமாமா கதைகளில் காட்டு வழியால் செல்லும் போது பிசாசுகளும், பூதங்களும், பேசும் மிருகங்களும் வந்து மறித்துக் கொள்வது வழமையானது. இவையெல்லாம் சேர்ந்து காட்டை இரசியங்கள் மிகுந்த ஒன்றாக எண்ணத் தோன்றியது. அவை உண்மையில் தீரா ரகசியங்களுக்குரியனதான்.

அது தவிர காட்டைச் சார்ந்துள்ள கிராமங்களை பற்றி செங்கை ஆழியன் எழுதிய பல நூலைகளையும் எனது பதினைந்து வயதிற்குள்ளாவே படித்திருந்தால் காட்டுக்கிராமம் சார்ந்த நாவல் என்று சொல்லப்பட்ட நிலக்கிளியையும் அப்பால் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசிக்க ஆரம்பித்ததும் நான் இந்த நாவலை முன்பு ஒரு முறை வாசித்திருப்பதான உணர்வு இருந்தது. அதற்கு சாட்சியாய் சில சொற்களும், சொற்றொடர்களும் என் மனசில் இன்னும் எஞ்சி இருந்தன.

இன்றைய காலத்திலோ இனி வரும் காலங்களிலோ இப்படியான களத்தை கொண்டு இன்னொரு நாவல் எழ வாய்ப்பில்லை எனவே நினைக்கின்றேன். ஈழத்தில் இல்லாமல் போனவைகளில் இதுவும் ஒன்று. நாவலில் வரும் முரலிப் பழத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் வீரைப்பழத்தை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன். இன்னுமொரு பத்து வருடங்களில் வீரைப்பழம் என்றால் என்னவென்று தெரியாத தண்ணிமுறிப்பு சிறுவன் இருக்க கூடும். (சில வேளை இப்போது இருக்கலாம்)

நிலக்கிளியை முதலில் வாசித்ததை விட இப்போது அதை இன்னும் ஈடுபாட்டோடு வாசிக்க கூடியதாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில் இதனை நான் வாசித்த போது இது எனக்கு கொஞ்சம் இது ஓவர் டோஸ். அதாவது கதையில் வரும் பதஞ்சலிக்கு கற்பு , காதல் என்ற வசனங்களுக்கு அர்த்தம் புரியாதது போல எனக்கு சில செய்கைகளுக்கும், சொற்களுக்குமான அர்த்தம் புரியவில்லை. இரண்டாவது முன்பு நான் அதை வாசிக்கும் போது காடு எனக்கு கனவாய் இருந்தது. இப்போது நான் அதை வாசிக்கும் போது காட்டை எனக்கு தெரிந்திருந்தது.

உண்மையில் இந்த பதிவை நான் எழுத முனைந்தமைக்கு நிலக்கிளியின் தாக்கத்தை விட , அது என்னில் கிளறி விட்ட காடு பற்றி நினைவுகளே காரணம் என்பேன். ஓரிரு நாட்களில் நாங்கள் இடம்பெயர்ந்து காடுகளின் கிராமங்களிற்கு போகையில் எனக்கு தெரியாது, இன்னும் சில வருடங்களிற்கு எங்களின் வாழ்க்கை இங்குதான் கழியப்போகின்றது என்று. இடம் பெயர்ந்து நாங்கள் போன ஊரில் ஒரே ஒரு உறவாக எங்களின் மாமாதான் இருந்தார். அவர்தான் படித்த வாலிபர் திட்டத்திலோ, அல்லது “வெளிக்கிடடி விசுவமடுவிற்கு” நாடகம் பார்த்தோ அங்கு வந்தவராக இருப்பர் என நினைக்கின்றேன். வாழ்க்கையில் நான் கண்டிராத நீளக்காணியும், தீர்த்தக் கேணி போன்ற பெரிய கிணறுகளும், நாள் தோறும் இறைத்துக் கொண்டிருக்கின்ற நீரிறைப்பிகளும், படங்களில் பார்க்கும் அருவி போல் அவை ஓடி பிரித்து செல்கையில் பலவேறாக ஆட்கள் நின்று பாத்தி மாறுவதும் மறக்க முடியாத ஒன்றுதான். பத்தி மாறுவதற்கு நான் நீ என்று சண்டை போடுவோம். ஏனெனில் அந்த காணியில் அப்போது 75 பேருக்கு மேல் இருந்தோம். எல்லோருக்கும் இது புதிதுதான்.

நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு எங்களின் உறவினர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவர் இன்னொரு காட்டுக்கரை கிராமமான முத்தையன்கட்டில் இருந்தார். ஒரு முறை அவருக்கு கட்டுத்துவக்கு வெடித்து அவரை பெரியாஸ்பத்திரியில் வைத்திருக்கும் போது போய் பார்த்தோம். அவர் வரும் போது மரை வத்தலோடுதான் வீட்டுக்கு வருவார். அதே போல் அது பருவங்களையொத்து பாலைப் பழமாகவோ, தேனாகவோ நீளும். நாங்கள் இடம் பெயர்ந்து போன பின்பு அதே போல மான்களை பார்க்கவும், பாலைப்பழம் பிடுங்கவும் ஆசைப்பட்டேன். ஆனால் இது முத்தைஐயன் கட்டு அல்ல. அதற்கு முன்னால் உள்ள இரண்டும் கெட்டான். (இரண்டு கெட்டான் என்பது காடுகள் அப்படியே இருக்க, மனிதர்களிடையே கொஞ்ச வசதிகள், நீரிறைப்பிகள், உழவியந்திரம் என்று) அது இப்போது எங்களை போன்று வந்து குவிந்தவர்களால் முழுக்க கெட்டானாகி மான்கள் மறைய , மலேரியா என்னும் மிருகத்தைத்தான் பார்க்க முடிந்தது. ஆனால் நிலம் தழையத் தழைய இருக்கின்ற பாலைப் பழங்களை சொண்டுகள் இரண்டும் ஒட்டும் வரை சாப்பிட்டு இருக்கின்றேன். பிறகு வந்த இரண்டு வருடங்களில் ஆறு மணிக்கு யானை உலவுகின்ற அந்த வீதிகளில் எந்த இரவில் போனாலும் யானைகளை காணக்கிடைப்பதில்லை.(நாங்களெல்லாம் முறம் இல்லாமலே யானை விரட்டின ஆட்கள் ) என் சிறுவயது காட்டை அண்டிய கிராமத்து சில வருட வாழ்க்கை இன்னுமோர் பதிவிற்குரியது. இப்போது நிலக்கிளி பற்றி சொல்லப் புறப்பட்டு காட்டில் பாதை தவற விட்டவனாக எங்கோ வந்து தொலைந்து விட்டேன்.

நிலக்கிளியை வாசிக்க தொடங்கும் போதே இப்படி நீங்கள் அந்த நாவலினுள் தொலைந்து போவதை காணலாம். காட்டோடான சிறுவயது ஞாபகங்கள் எதுவும் உங்களிற்கு இருந்தால் அது இன்னுமதிகம் சாத்தியம். காட்டை, காட்டின் மிருகங்களை, அங்கிருக்கும் மனிதர்களின் மனங்களை, காட்டை வெல்லும் அவர்களின் மன உறுதியை மிக எளிய நடையில் சொல்வது அவ்வாறு சுயஅனுபவம் வாய்த்தவரை தவிர வேறு ஒருவரால் கடினமானது.

உதாரணமாக

"பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம்! பூச்சி குத்திப்போடும்!' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.

'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன்"

என்ற வரிகளில் ஒரு நாய் , அதுவும் குறிப்பாக காட்டுப்புறத்திலே இருக்கும் நாய் திடீரென்று ஒரு திசையை நோக்கி அதன் முன்னிரண்டு கால்கள், காதுகள், கண்கள், மூக்கு என எல்லாவற்றையும் நேராக்கும். அப்படியே சிலை போல ஒரிரு நிமிடங்கள் நிற்கும். பின்பு அப்படியே மெதுவாக முதலில் கிண்டி வைத்த கிடங்கில் படுத்துவிடும். பாய்வதற்கு தயாராகுமே ஒழிய சரியான சந்தர்ப்பம் அமையாவிடில் பாயாது. ஆக அதன் வாழ் நாளில் தயாராகுதல் தான் அதிகம் நடக்கும். தேவையில்லாததற்கும் சேர்த்து. இது எங்களுக்கு ஞாபகம் இருக்குயொழிய சரியான வார்த்தைகளில், சரியான இடத்தில் சொல்ல வராது. அது அவருக்கு வந்திருக்கிறது.


பல இடங்களில் ஒரு காட்டுக்கிராம வாழ்க்கையை சொல்லும் பாலமனோகரன், புயல் அடிப்பதான ஒரு இடம் மட்டும் எனக்கு சற்று சினிமாத்தனமாக படுகின்றது. அங்கு நிகழ்கின்ற உடலுறவை சொல்லவில்லை. அது நிகழ்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம்தான் அப்படியிருக்கின்றது.

ஆனாலும் நினைத்தாலும் கிடைக்க முடியாத அந்த வாழ்க்கை தொலைத்தவர்களிற்கு இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க இதுவொரு சந்தர்ப்பம் தான்
அட்டைப்பட உதவி - கானா பிரபா

நூலகத்தில் நிலக்கிளியை வாசிக்க

கானா பிரபாவின் வலைப்பதிவில் பாலமனோகரனின் பேட்டி

விசரர்களின் சூத்திரம் (சிறுகதை)

வீட்டுக்கு முன்னால் ஊரிப் பாதை போகின்றது. அனேமாக அது ஆளரவமற்று அமைதியாய்தானிருக்கும். மழை பெய்தால் அங்கிருக்கின்ற பள்ளங்களிலுள் தண்ணீர் தேங்கி நின்று வல்லிபுர கோவில் நாமம் போல கரைந்து இருக்கும். இடைக்கிடை கடந்து போகின்ற மாட்டுவண்டில்களின் சத்ததையோ , மத்தியான வெயிலுக்குள் ஊரி குத்த குத்த கள்ளுக் கொட்டிலுக்கு போக அவதிப்பட்டு நடக்கும் கால்களின் சத்தத்தையோ கேட்கலாம்.

இந்த வீதிக்கு அப்பால் மூன்று கிராமங்கள் இருக்கின்றன என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார். என்ன சனங்கள் இவர்கள் என எண்ணத் தோன்றும் படியாக காலையில் இருந்து மாலைக்குள் கடக்கும் பத்து பன்னிரண்டு மாட்டு வண்டில்கள், ஐந்தோ ஆறு மீன்காரிகள் , நல்ல தண்ணீருக்கு நடக்கின்ற ஒரு தொகை பெண்கள் கூட்டம். எப்போதாவது இருந்து விட்டு போகின்ற கூட்டுறவு சங்க லொறி. இவைகள் போதும் வருடம் முழுவதற்கும் என தலையை உள்ளே இழுத்துக் கொண்டிருப்பார்கள்.

வீட்டின் வாசல் படியில் இருந்து அப்படியே நேரே நோக்கினால் றோட்டை கடந்ததும் ஒரு தண்ணீர் பைப். அத்துளு குளத்தில் இருந்து நல்ல தண்ணீரை காலையில் கொண்டு வருவதுடன் அதன் வேலை முடிந்து விடும். அதற்கும் அப்பால் ஒரு மின்மாற்றி, மின்மாற்றி மறைவில் பிள்ளையார் கோயிலுக்காக ஒரு சின்ன பூந்தோட்டம். அதற்கு தண்ணீர் பின்னால் இருக்கும் பாதிக் கிணற்றில் இருந்து வருகின்றது. அதற்கும் அப்பால் ஒரு வாசிக சாலை.

வீட்டின் படியின் மூலைப்பாடாய் குண்டியை வைச்சு இருந்தால் மின்மாற்றியை முழுதாயும், பூந்தோட்டத்தை கால் வாசியாயும், வாசிகசாலையை அரைவாசியையும் பார்க்கலாம். முழுதாய் கண்ணில் இருந்து மறைவது அந்த பாதிக்கிணறுதான். மீதிக்கிணறு மயில்வாகனத்தாரின் காணிக்குள் இருந்தது. கிணற்றை பாதியாய் பிரித்து மதில் ஓடியது. வாசிகசாலையும் தண்ணீர் பைப்படி போல காலையில் அமர்க்களப்படும். அல்லது அதன் அமர்க்களம் ஞாயிற்றுகிழமை வீரகேசரியில் தான் தொடங்கும்.

வீதியின் வலது புறமாய் ஏராளம் வீடுகள். அனேகமான சொந்தகாரர் வீடுகள். அனேகம் என்ன ஏறத்தாழ முழுவதுமே. சசி மாமி வீடுவரைக்கும் அது. இடது பக்கமும் அப்படித்தான்.

அவன் இந்த ஊரில் பிறந்து தவழ்ந்து வளர்ந்தவனல்ல. மாறாக அவனது அப்பாவும் அம்மாவும் இது மூன்றையும் இன்னும் ஒன்றை மேலதிகமாக தங்களின் கலியாணத்தையும் இந்த ஊரிலே செய்து இருந்தனர். அப்படித்தான் அவனுக்கும் இது ஊராகியது. நினைவு புலப்படும் பொழுதுகளில் இருந்தே பள்ளி விடுமுறைக்கு அப்பாவின் யமாஹாவில் பின்னால் ஓட்டியபடி வந்த சில நாட்களிலே இந்த ஊர் பிடிக்கமால் போய்விட்டது. அந்த வயதில் அவனுக்கு இந்த ஊர் பிடிக்கமால் போக தத்துவார்த்த காரணமா அவனுக்கு இருக்க முடியும்?. இல்லாவிட்டால் என்ன சின்னப்பிள்ளைகளை போல பாழாய் போன பேய்தான் அவனின் பயத்திற்கு காரணம் என கண்டு பிடித்தது சொன்னாலும் அது அவனின் விசயத்தில் முதலில் பிழை.

அவன் அந்த ஊரில் முதலில் பயந்தது பேய்க்கு அல்ல. மாறாக சிவசேனத்திற்கு. ஊருக்கு வந்த காலத்தில் இருந்தே எதற்கெடுத்தாலும் சிவசேனம் சிவசேனம் என்று சொல்லிச் சொல்லியே சிவசேனத்தை கூட்டி வந்து விட்டனர் அந்த ஊர்க்காரர். மக்கள் இப்படி எதிர்பார்த்து இருக்கும் சிவசேனம் என்ன அந்த ஊரின் எம்.பி யா? இல்லவே இல்லை. சிவசேனம் தான் அந்த ஊர் சார்பில் வடமராட்சியெங்கும் திரியும் ஒரே ஒரு விசரி.

சாம்பலை தூவி விட்டது போல் மெல்ல இருள் படரும் ஒரு மாலைப் பொழுதில் தேசிமரத்தில் கீழ் மண்ணை கூட்டி குவித்து எகிப்திய பிரமிட் எழுப்ப முயன்ற அவனை “சிவசேனம் வந்திட்டாள்” என்ற குரல் தூக்கி எறிந்து மேல் மாடி அறையில் போட்டது. வீட்டின் முன்கதவை யார் சாத்தினார்கள்? கேற்றை யார் பூட்டினார்? அவனோடு இருந்த மற்ற பெடியன் என்ன ஆனார்கள்? வாசிக சாலையில் நின்றிருந்தவர்கள் எங்கே போயினர் என்று அவனுக்கு எதுவுமே தெரியாது. விசர்களுக்கு அதிக பலம் இருக்கும் என்றும் சிவசேனத்திற்கு அதை விட அதிக பலம் என்றும் தேவன் அண்ணா அடிக்கடி சொன்னது அவனை இப்போது பூட்டி இருந்த அறைக்கதவின் பலத்தில் சந்தேகம் கொள்ள வைத்தது. அப்போதுதான் பார்த்தான் அவன் காலுக்கு கீழே அவன் தங்கச்சி சிணுங்கிய படியிருந்தாள். “சிணுங்காதையடி சத்தம் கேட்டு சிவசேனம் வரப்போறாள்” என்ற அதட்டலின் பின்னர் அவள் சிணுங்கலை வெறும் அணுங்கலாக மாற்றினாள். இவன் பூட்டப்பட்டிருந்த யன்னல் கண்ணாடியால் மெல்ல எட்டி பார்த்தான். சிவசேனம் தண்ணீர் பைப்படியில் நின்றிருந்தாள். கட்டையாக, ஒரு சைனா மஞ்சள் நிறத்தில் உப்பலும் இல்லாத, மெலிவு இல்லாத தோற்றம். அவள் இடுப்பில் கை வைத்து றோட்டின் இரு கரையிலும் தலையை கம்பீரமாக நிமிர்த்தி ஒரு ராஜகுமாரி போல பார்த்தாள்;. சடரென்று அவள் கழுத்தில் இருந்து முழங்கால் வரை தொங்கிய ஒரே ஒரு நைந்து போன ஆடையை அநாயசமாய் கழற்றி மின்மாற்றி ஓரமாய் எறிந்து கணத்தில் அதிரூப சுந்தரியனாள். இவன் அப்போது ரைரனிக் படத்தை பார்க்கவில்லை என்பதால் அவள் எதற்கு அப்படி நிற்கிறாள் என்று முகட்டை பார்த்து யோசிக்க வெளிக்கிடும் போது...சிவசேனம் அந்த ஆடையை தான் பிறந்த மண்ணுக்கே கொடுத்து விட்டு கோயில் வீதியால் கடந்து மறைந்தாள்.

அதற்கு பிறகு அவன் ஊருக்கு போவதில்லை என்று ஒற்றைக் காலில் நின்றான். ஆனால் நெல்லுக்கட்ட ஊருக்கு வந்த ஆனந்தமாமா சிவசேனத்தை இந்தியன் ஆமி சுட்டுப் போட்டுதாம் என்று அம்மாவிற்கு சொல்வதை கேட்ட பின்னர் தான் ஊருக்கு போக சம்மதித்தான். அதுவும் இந்த முறை விடுமுறைக்கல்ல. இனி நான் படிக்க போகும் எட்டு வருடங்களையும் அங்கிருந்து படித்து அவனை ஒரு டாக்குத்தன் ஆக்க வேண்டும் என்று அப்பம்மாவில் இருந்து, இன்னும் யார் யாரோ எல்லாம் ஆசைப்படுவதாக வந்து சொல்லி அவனை பெட்டி படுக்கையோடு ஊருக்கு அனுப்பி விட்டனர்.

ஊரின் வீடு அப்பப்பா நெல்லுக்கட்டியும், யாழ்ப்பாணத்தில் லேக் வியூ ஹோட்டல் வைத்து சேர்த்த காசில் கட்டிய பெரிய வீடு. அவனும் அப்பம்மாவும் மாத்திரமே இப்போது அந்த வீட்டில் என்பதால் ஓரிரண்டு அறைகள் தவிர மிகுதி எல்லா அறைகளும் பூட்டி இருந்தன. பூட்டி இருந்த அறைகளுக்கு அப்பப்பா பாவித்த பொருட்களும் புத்தகங்களும் இன்ன பிற பொருட்களும் நிறைந்திருந்தன.

சுவாமி அறை மேல் மாடியில் இருந்தது. படிக்கும் பிள்ளை என்பதால் இவனே மாலையில் சுவாமி படத்திற்கு விளக்கு வைக்க வேண்டி இருந்தது. அந்த சுவாமி அறையில் அப்பப்பாவின் படம் ஒன்று இருக்கும். அந்த படத்தில் இருக்கும் அப்பப்பாவின் கண்கள் அந்த அறையில் எங்கு நின்றாலும் அவனையே பார்ப்பது போன்று இருக்கும். அப்பம்மாவிடம் இது பற்றி சொல்லும் போது “அவருக்கு உன்னில் நல்ல விருப்பம் அதுதான் உன்னையே பார்க்கிறார்” எண்டு சொன்னா.

அதற்கு பிறகு அவன் இரவில் ஆங்கிலமும் கணிதமும் கேட்டு படிக்க தேவன் அண்ணை வீட்டை போனான். தேவன் அண்ணை அவனின் சொந்தக்காரர்தான். தேவன் அண்ணையின் எல்லா சகோதரங்களும் நல்ல கெட்டிக்காரர்கள் என்பதை அப்பம்மா அறிந்தபடியினால் அவாவவும் சந்தோசமாய் அங்கு படிக்க போவதை ஏற்றுக்கொண்டா. ஆனால் அவன் அங்கு டாக்குத்தன் ஆகாது போனதற்கு காரணங்கள் பல இருந்தாலும் ஈழம் ஒரு வீரனை இழந்ததற்கு அங்குதான் அத்திவாரம் போடப்பட்டது. இப்படி அத்திவாரத்தை போடக்கூடிய ஒரு விசயத்தை தேவண்ணை விஞ்ஞான பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கும் போது அவனிடம் சொன்னார்.

“கொப்பப்பாவை எங்க இன்போம் பண்ணினது தெரியுமோடா உனக்கு?முதலி அறைக்கு பின்னால் இருக்கிற கொட்டில் பக்கமாய் பார் ஒரு புட்டி இருக்கும் அங்க தான் அவரின்ர குடலை எடுத்து தாட்டது. நான் தானே கிடங்கு வெட்டினான்” என்று நீளமாய் சொல்லி விட்டு சொன்னார் "கவனமடா கொப்பப்பா உதுவழிய திரிவார். இரவில் உன்ர வீட்டை விட்டு வெளியில் இறங்கதை” என்னும் போது..இவன் அவசரமாய் இடை மறித்து "அப்பம்மா சொன்னவா அப்பப்பா என்னில் நல்ல விருப்பம் எண்டு அவர் என்னை ஒண்டும் செய்ய மாட்டார்" என்றான்.

தேவண்ணை ஒரு மாதிரி தலையை வைச்சுக் கொண்டு ஒரு உலுப்பலோடு சொன்னார். “அது தானடா விருப்பமான ஆட்களை பிடிக்கதானே அவர் வருவார்”

தேவண்ணை சொல்வது உண்மையாக அவனுக்கு பட்டது. எப்பக்கம் போனாலும் திரும்பி பார்க்கும் அப்பப்பாவின் கண்களும், அவன் கதைத்தால் அதையே திருப்பி பத்து தரம் திருப்பி சொல்லும் அந்த வீட்டு சுவர்களும் அதை உண்மை என்று சொல்லின. இரவில் இவன் அப்பம்மாவின் சீலை தலைப்பை பிடிச்சு கொண்டே திரிஞ்சான். இரவில் படுத்திருக்கும் போது திடீரென்று முழிப்பு வந்தால் அப்பம்மாவை காணக் கிடைக்காது. இவன் அப்பம்மா என்று குழறுவான். அந்த வீட்டு சுவர்கள் அந்த சத்தத்தை பல மடங்கு அதிகரித்து எண் திசைகளாலும் அவன் காதை நோக்கி குவிக்க தொடங்க இவன் வீட்டை வி்ட்டு வெளியேற தலைதெறிக்க ஓடி சின்னி விரல் கதவு விளிம்பில் அடி பட்டு இரத்தம் ஒழுக வெளியே வந்தால் அப்பம்மா தலையில் பனிக்கு சீலை போர்த்தபடி பின்காணியில் பொறுக்கிய பனங்கொட்டைகளை கையில் கொண்டு வருவா.

அவனுக்கும் அப்பம்மா தனக்கு பாதுகாப்பு தருவா என்ற நம்பிக்கை விட்டு போச்சு. அதனால் அவன் தேவண்ணை வீட்டில் கிடையாய் கிடந்தான். அப்படித்தான் ஒரு முறை பகல் பொழுதொன்றில் தேவண்ணை வீட்டில் இருக்கும் போது கேற்றை யாரோ தட்டி கேட்டது. திடீரென்று “யோகன் மாமா வந்திட்டார்” என்று மெல்ல குழறுவது போலான சத்தம் கேட்டது. இவனுக்கு முன்னொரு முறை தேசிமரத்திற்கு கீழ் நிற்கும் போது கேட்ட சத்தத்தை போல உணர்ந்தால் மழைக்கு ஓடி ஒளியும் ஆட்டுக்குட்டி போல் தேவண்ணையின் சாரத்திற்கு பின்னால் ஒளிந்தான்.

வந்தது யோகன் எனப்படும் யோகன் மாமா. ஒரு வகையில் எங்களுக்கெல்லாம் சொந்தகாரர். எங்களுரில் தற்போது இருக்கும் விசர்களில் ஒருவர். பழக்கம் இல்லாதவை தவிர மற்ற ஆட்களும் எப்படி நடப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை. ஆகவே அவரை கையாள தேவண்ணையின் அம்மாவால் மட்டுமே அது முடியும். “அக்கா பசிக்குது” என்று குரலுக்கு “வா யோகன்” என்று குரல் மட்டும் அவருக்கு போதுமானது. இவர்கள் யாராவது சிரித்தாலோ சொறிந்தாலோ கற்கள் எங்களை நோக்கி வரும் என எச்சரிப்பட்டு இருப்பதினால் அவருடன் யாரும் கதைத்ததே இல்லை. ஆனால் அவனுடைய கணீப்பீட்டின் படி சிவசேனத்தினுடன் ஒப்பிடுகையில் அவர் ஒரு “ஒரு நல்ல விசர்”.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை. இவன் வாசிக சாலையில் வீரகேசரி வாசித்து விட்டு நிமிர்ந்தால் இவன் இருக்கும் அந்த நீண்டு வாங்கிலின் முடிவில் யோகன் மாமாவும் இருக்கிறார். அவர் படிப்பது ஆங்கில பத்திரிகை. பள்ளிக்கூட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கீழே விழுந்து விசராக்கியதாய் சொல்லப்படும் ஹாட்லியில் படித்த மிகத்திறமையாலிகளில் ஒருவர் அவர் என்று சொல்லப்படுவது உண்மைதான் போலிருந்தது. இப்போது வாங்கில் சுவரோடு ஒட்டி போடப்பட்டிருந்து. மறுபக்கம் பெரிய மேசை. இவன் வெளியே போக வேண்டுமானால் யோகன் மாமா எழுந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அவர் போக மட்டும் அப்படியே இருக்க வேண்டும். சில வேளை மறுநாள் காலை வரை அவர் அதிலிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நடப்பது நடக்கட்டும் என இவன் அவருடன் கதைக்க ஆரம்பித்தான்.

“யோகன் மாமா நீங்கள் ஹாட்லியில் தானாம் படிச்சனீங்கள்”
“yes”

நானும் ஹாட்லியில தான் படிக்கிறன்

“thats good”

நீங்கள் படிக்கும் போது யார் பிரின்சிபல்?

Mr.பூர்ணம்பிள்ளை..

ஓ..இப்ப poornampillai block இல் தான் library இருக்கு..

oh...really..?

“நான் ரியூசனுக்கு போக வேணும் யோகன் மாமா நீங்கள் கொஞ்சம் எழும்பினால் நான் உதல போகலாம்..”

sure..u can go..


இவனுக்கு அப்படா என்றிருந்தது...யோகன் மாமாவோட கதைச்சதை தேவண்ணைக்கு சொல்ல வேணும் என்றும் நினைத்துக்கொண்டான்.


அதற்கு பிறகு வலிகாம சனம் ஊருக்கு வந்து நிறைய தொடங்கி கொஞ்ச நாளில் ஊரில் இருந்தும் சனம் இடம்பெயர தொடங்கினர். அப்பம்மா ஊரை விட்டு வரமாட்டன் என்று ஒரேயடியாய் இருந்ததினால் அப்பா இவனை மட்டும் வந்து கூட்டிக் கொண்டு போனார். ஊரை ஆமி சூழ்ந்து கொண்டது.

ஏழு வருடம் கழித்து சம்பந்தர் தனியாகவோ அல்லது அப்பரும் சேர்ந்துதானோ என்னவோ பாடிய தேவாரத்தின் காரணமாகவே யாழ்ப்பாணத்தின் கதவு திறந்து கொண்டது. பழையபடி ஆனந்தமாமா நெல்லுக் கட்ட லொறியுடன் வந்து முதற் செய்தியாய் “யோகனையெல்லோ திக்கத்தில் வைச்சு ஆமி சுட்டு போட்டுது” என்று சொன்னார். அவனுக்கு திக்கென்று இருந்தது. அந்தாளை ஏன்? அதுவும் அந்தாள் ஒரு “நல்ல விசர்”

பாதை திறந்து எல்லோரும் ஓடுப்பட்டு திரிய அவனுக்கும் ஊருக்கு போகும் ஆசை மீண்டும் வந்தது. ஊர் மாறவே இல்லை. ஆனால் ஒன்று ஊரிப்பாதையை மூடி இப்போது தார் றோட்டும் அதில் திரிய கொஞ்ச மோட்டார் சைக்கிள்களும் வந்திருந்தன. மற்றும் படி வாசலில் படியில் குண்டியை வைச்சால் முதற் பந்தியில் சொன்ன அவ்வளத்தையும் இப்பவும் பார்க்கலாம்.

வீட்டிற்குள் திரியவும் அவனுக்கு இப்போது பயம் இல்லை. “அப்பம்மா” என உரத்து கத்தி அது எதிரொலிப்பதை கேட்டு ரசித்தான். இருட்டிக்கொண்டு வரும் ஒரு நேரத்தில் தேவண்ணை வீட்டுக்கு போனான். தேவண்ணை வெளியில் போயிருப்பதாக சொன்னார். அவர்கள் வீட்டிலும் ரிவிகள், மோட்டார் சைக்கிள்கள் என வந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் வாசலில் ஆளரவம். திரும்பி பார்த்தால் தேவண்ணை நின்றிருந்தார். “என்ன தேவண்ணை என்னை தெரியுதோ” என கேட்டதற்கு “ஓஓஓ” என்று கிட்டத்தட்ட எல்லா பல்லும் தெரிய சிரிச்சபடி சொல்லிக் கொண்டு கதிரையில் இருந்து முகட்டை பார்க்க தொடங்கினார். என்ன தேவண்ணை பேசமால் இருக்கிறீயள் கதையுங்கோவன் என இவன் கேட்ட போது முகட்டில் இருந்து தலையை இறக்கி இவனைப் பார்த்து சிரித்து விட்டு திருப்பி ஏற்றினார். பக்கத்தில் இருந்த இவனது தங்கச்சி காலை மிதித்து காதுக்குள் குசுகுசுத்தாள் “அவருக்கொரு மாதிரியெடா”

My Blog List