சொல்லி வேலை இல்லை


எனக்கு சில சிங்கள வார்த்தைகள் தெரிந்திருந்தது. அந்த வார்த்தைகளை எனக்கு இப்போதும் மறக்க முடிவதில்லை. நண்பர்கள் மத்தியிலும் அத்துடன் கொஞ்சம் சிங்களம் தெரிந்தவர்களை சமாளிக்கவும் "நம மொக்கத்த" (பெயர் என்ன)"கொய்யத என்னே" (எங்க போறாய்)"வேளவ கியத ( என்ன நேரம்)போன்ற வார்த்தைகள் பயன்படுத்தினேன். இதனை விட இன்னும் கொஞ்சத்தை கேள்வி பதிலாக தெரிந்தது வைத்திருந்தேன். வீதிச் சோதனை இராணுவத்தின் நாளாந்த நேர்முக தேர்வு அது


கேள்வி – "ஒயட்ட சிங்கள கத்தக்கரட்ட புளுவங்"? (உன்னால சிங்களம் கதைக்க முடியுமா?)பதில் "டிக்க டிக்க தன்னவ" (கொஞ்சம் கொஞ்சம் தெரியும்)
இதற்கு பிறகு அந்த சிப்பாய் தொடரான சிங்களத்தில் எதுவும் கேட்டால் "மாம சிங்களம் தன்ன நாய "(எனக்கு சிங்களம் தெரியாது) என்றும் பிறகு ஆங்கிலத்தில் i am student என்றெல்லாம் சொல்லி பாடசாலை நேரத்திற்கு முந்தியோ பிந்தியோ போய் சேர்வது அவரவர் கெட்டித்தனம்.

அந்த வார்த்ததைகளில் எனக்கு "கியலா வடக் நாய" என்ற வார்த்தைதான் அதிகம் பிடித்திருநதது. தமிழில் அந்த மாதிரி, செம சுப்பர் என்னும் வார்த்தைகளுக்கு நிகரான அதற்கு "சொல்லி வேலை இல்லை" தமிழில் பொருள் வரலாம் என்றான் கமகே.

கமகே தான் இந்த எல்லாம் சிங்கள வார்த்தைகளையும் எனக்கு சொல்லித் தந்தது. அதை விடவும் எக்காய் , தெக்காய் , துணாய், கத்தராய் பகாய், என்று இலக்கங்களை ஐம்பது வரையும் சொல்லி தந்தான்.

கமகே அந்த பெரிய ஆங்கிலேயே காலத்தில் கட்டப்பட்ட அரசு பங்களாவின் சமையல்காரனாய் இருந்;தான். அந்த மாவட்டத்திற்கு அடுத்தது சிங்கள மாவட்டம் என்பதால் இங்கும் அதிகம் தமிழ் தெரிந்த சிங்களவர்களே வேலை பார்த்தார்கள். ஓட்டுனராய், சமையல்காரர்களாய், பொலிஸ்காரார்களாய் எல்லாம் சிங்களவர்களும் இருந்தார்கள்.

அந்த அரசு விடுதிக்கு நான் வந்ததிலிருந்து பிறகு அதை விட்டு போகும் வரை சமையல்காரனாய் கமகே இருந்தான். அவனை தவிர அந்த அரசு விடுதியின் ஊழியர்களில் ஓட்டுனராய் இருந்த ஜெயசிறிதான் சிங்களவர். இதை விட நூழைவாயிலில் நின்றிருந்த பொலிஸ்காரர்களில் சிங்களவர்களும் தமிழர்களும், முஸ்லிம்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் அடிக்கடி மாறி மாறி அந்த மாவட்ட பொலிஸ் நிலையத்தினால் விடப்படும் ஒழுங்கிற்கு ஏற்ப வந்து கொண்டிப்பதால் அவர்களை எனக்கு பழக்கம் இருந்ததில்லை.

ஜெயசிறி கூட சிவசுந்தரம் மாமா இல்லாத வேளைகளில் தற்காலிக ஓட்டுனராய் தான் வந்தார். ஆனால் ஜெயசிறியையும் மறக்க முடியாது இருந்தது. அந்த அரசு பங்களா அமைந்திருந்த காணி அரைவாசிக்கு மேல் காடு பிடித்து கிடந்தது. அதில் இருக்கும் மரங்ளை குரங்குகள் தங்கிடமாக மாற்றிக் கொண்டன. அந்த காணியின் ஓரத்தின் ஒரு சிறிய அறை இருந்தது. அந்த அறையை காணியை பாரமரிப்பதற்கான மண்வெட்டி, கோடாலி என்று இன்ன பிற பொருட்கள் நிறைந்து கிடந்தன. ஆனால் அந்த அறையின் கதவு திறபடும் இடத்தின் உட்பக்கமாக பெரிய கருங்குளவிக் கூடு இருந்தது. அது நாளாக நாளாக பெரிதாக வளர்ந்து விட்டதால் அந்த அறையை யாரும் திறப்பது இல்லை. வெளியே எடுத்த பொருட்களை வைத்தே காணிப்பராமரிப்பை சமாளித்து கொண்டு இருந்தனர். இதற்கு பிறகு ஒரு நாள் கிணறு இறைக்க ஒரு நீளமான கயிறு தேவைப்படுவதாக சொன்ன போது ஜெயசிறி திறப்பை எடுத்துக்கொண்டு அறையை நோக்கி போனார். நான் மாமியிடம் கூட சொன்னேன். மாமி ஜெயசிறிக்கு அந்த குளவிக் கூடு இருப்பது தெரியாது என நினைத்து அவரை கூப்பிட்டு சொன்ன போதும் அவர் பாராவயில்லை நோனா என்று சொன்னபடி போய் கதவை திறந்து கயிறை எடுத்து கொடுத்து விட்டு கதவை திறப்பி பூட்டி விட்டு போய் விட்டார். ஜெயசிறி வெள்ளை வேட்டி கட்டிக்கொள்பவராகவும் கமகே சரம் கட்டுபவனாகவும் ஜெயசிறி ஓய்வெடுக்கும் வயதை அண்டிவராகவும் கமகே நடுத்தர வயதுகாரனாகவும் காணப்பட்டதுதான் மேலதிகமாக இருவருக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஜெயசிறியை பற்றி எனக்கு நினைவில் நிற்பது. ஆனால் கமகே அப்படியல்ல.




பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வந்து சமையறைக்கு போய் விடுவது எனது வழக்கம். கமகே இரவு சாப்பாட்டுக்குரிய மரக்கறியை வெட்டிய படி அந்த மரக்கறியின் சிங்கள பெயரை சொல்லித் தருவான். அப்போது மாமாவும் மாமியின் சாய்பாபாவின் பக்தர்களாய் இருந்தார்கள். நானும் அவர்களை போலவே இருந்தேன். முதலில் நான் வியாழக்கிழமையில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்தேன் . பின் வாரம் முழுதுமே மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்தேன். இந்த சாய்பாபா பிரச்சனையை கமகேக்கும் தெரிந்தே இருந்தது. ஒரு நாள் கமகே ஒரு மந்திரம் ஒன்று போட்டுக்காட்டுவதாக எனக்கு சொன்னான். பின்பு எந்த சேதராமும் இல்லாத முழு உருளைக்கிழங்கை எடுத்து முதுகிற்கு பின்னால் வைத்து கொண்டு சாய்பாபா சாய்பாபா என்று கண்களை மூடி சொன்னபடியே இரு கையிலும் உருளைக்கிழங்கை சரிபாதியாக எடுத்து காட்டினான். நானும் உருளைக்கிழங்களை வாங்கி பார்த்தேன். அது அழுத்தம் திருத்தமாக வெட்டிப்பட்டு இருந்தது. நானும் எப்படியெல்லாம் இது நடந்திருக்க கூடும் என யோசித்துப் பார்த்து திருப்பி திருப்பி அவனை செய்து காட்ட சொன்ன போதுஇ அவன் அன்றைய சமையலுக்கு உரிய உருளைக்கிழங்கையெல்லாம் எனக்கு மந்திரம் போட்டே அறுத்து முடிந்தான். இதற்கு பிறகே திடீரென்று எனக்கு கமகேயை பிடித்து போனது.




கமகேயின் பெற்றோர்கள் நுவரெலியாவில் இருந்தனர். வவுனியாவில் ஒரு சிங்கள பெண்ணை காதலித்து கல்யாணம் முடிந்து இருப்பதாகவும் சொல்லி எனக்கும் ஒருநாள் படம் கொண்டு வந்து காட்டினான்.

கமகே பைத்தியமாக இருந்த விசயங்களில் ஒன்று லொட்டரி ரிக்கற் . அவன் தனது சம்பளத்தில் பெரும்பாலானவற்றை லொட்டறி ரிக்கற்றை வாங்குவதற்கே செலவு செய்தான். கமகேயை எனக்கு பிடித்து போனப் பிறகு அவனுக்காக அவன் வாங்கும் மகஜன சம்பந்த லொடடறி ரிக்கற்றின் அதிஸ்ர எண்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் தொலைக்காட்சியில் பார்த்து சொன்னேன். நான் பார்த்து சொன்ன பிறகு அனேகமான இலக்கங்கள் லைக்காட்சியில் வந்ததற்கும் கமகேயின் ரிக்கற்றுக்கும் பொருந்தி வந்தாலும் கடைசி இரண்டு மூன்று இலக்கங்கள் பிழைத்து போய் அவன் கோடீஸ்வரன் ஆகமால் போனான். இருந்தாலும் கமகே என்னால் என்றோ ஒரு நாள் அதிஸ்ரம் வரும் என நம்பினான். அதை நிரூபிப்பது போல் ஒரு சம்பவமும் நடந்தது.

நான் கொழுத்து போக தொடங்கியதில் இருந்து மாமி என்னை பாடசாலைக்கு நடந்து போகச் சொன்னா. நானும் சில நாளாக நடந்து போய் பூட்டப்பட்ட பாடசாலைக்கதவிற்கு முன்னால் நின்று யோசித்தேன். ஓரிரு நாட்கள் கழித்து கமகே அந்த வழியால் அன்றைய சமையலுக்கு உரிய மரக்கறி வாங்க சைக்களில் வந்தான். நான் அவனை கண்டு விடவே என்னை பள்ளிக்கூடம் கொண்டு விடுமாறு கேட்டேன். அவனும் சரியான ஏற்றிக்கொண்டுஇ வழியில் புதிதாய் அறிமுகமாகி இருந்த மங்கி மஜிக் என்ற சுரண்டல் ரிட்டற் வாங்க என்று நிறுத்தினான். அந்த ரிக்கற் இலங்கை தேசிய லொத்தர் சபையால் அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களாகதான் ரிவியில் விளம்பரம் போய் கொண்டு இருந்தது. என்னை கொண்டே ரிக்கற்றை எடுப்பித்து சுரண்டியதில் 150 ரூபா விழுந்தது. அதற்கு பிறகே அவன் என்னை பெரிதும் அதிஸ்ரம் வாய்த்தவன் என்று சொல்ல ஆரம்பித்தான். பிறகு கமகேக்கும் எனக்கு ஒரு ஒப்பந்தம் வந்தது.

கமகே ஒன்றுவிட்ட ஒரு நாள்தான் மரக்கறி வாங்க வருவான் அந்த நாளில் என்னைக் கொண்டு போய் பாடசாலையில் விடவேண்டும் என்றும் பதிலாக நான் சுரண்டல் ரிக்கற்றை அவனுக்காக எடுத்து இவனை அதிஸ்ரத்தில் விழுத்துவது என்றும் முடிவானது. இதற்கு பிறகு அந்த ஒன்று விட்ட ஒரு நாள் நடந்து போவதை ஈடு செய்வதை கூட நான் கண்டு பிடித்து இன்னொரு திட்டம் தீட்டினேன். நாளாந்தம் மாமி தரும் டிபன் பொக்சை மேசையில் விட்டுவிட்டு போகவே மாமி அதை பார்த்து கமகேயிடம் கொடுத்து விட பிறகு அப்படியே சைக்கிளில் ஏறிப்போனேன். இதற்கு கூட கமகே ஒத்துழைத்தான். ஆனால் எனக்குக்கு தெரிந்த வரை கமகேக்கு அந்த 150 ரூபாவை விட வேற எதுவும் நான் விழுத்திக் கொடுத்தாக ஞாபகம் இல்லா விட்டாலும் கமகே கடைசி வரை அதை சுரண்டுவதை விடவில்லை என்பது ஞாபகத்தில் இருந்தது.




இந்த லொட்டறி ரிக்கற்றை விட அடுத்தாக அவனுக்கு ஆர்வம் இருந்தது மின்னியல் பொருட்களில். சில வேளை அவன் தனது புது மனைவிக்கு இப்படியான ரிவி இ டெக் போன்றவற்றை வாங்கி கொடுக்க நினைத்தனோ என்னவோ. மாமி விற்க இருக்கும் பொருட்களின் விபரத்தை அறிந்து தான் தவணை முறையில் காசு தருவதாகவும் நோனா வேற யாருக்கும் அதை விற்க கூடாது என்றும் கூறி மெல்ல மெல்ல ரிவி , டெக் வாங்கினான். பிறகு அதற்கு வயர் தேடுவதற்காக எல்லோரும் திறக்க பயந்து கடைசியில் ஜெயசிறி திறந்த அறைக்குள் இரவில் போய் குளவி கூட்டை கொழுத்தினான். அங்கிருந்த சின்ன சின்ன வயர்களை எடுத்து முடித்து பெரிய வயர் ஆக்கினான். பிறகு அதற்கு இருக்கும் பழைய கார் பட்டறியை எடுக்கவா? என்று நோனாவை கேட்டுச் சொல்லச் சொன்னான். இப்படியே அந்த பட்டறியிலே மாமியில் இருந்து வாங்கிய ரிவி டெக்கில் எனக்கு படம் போட்டு காட்டினான். பிறகு தான் லீவில் போகப் போவதாகவும் இவற்றை தனது மனைவிக்கு கொடுக்கப்போவதாகவும், நுவரெலியாவுக்கு அம்மே தாத்தே (அம்மா , அப்பா) யிடம் போகப்போவதாக சொல்லி போனான். பல நாட்கள் கழித்து வந்தான். வரும் போது நிறைய பழங்கள், கறுவா,தேயிலை எல்லாம் கொண்டு வந்தான். நான் அவ்வளவு மொத்தமும் நீளமுமான கறுவா பட்டையை கண்டதில்லை. தங்களது வீட்டு கறுவா அது என்று சொன்னான். நான் ஒரு பெரிய பட்டையை உறைக்க உறைக்க நாக்கால் வீணீர் வடிய வடிய சாப்பிட்டேன். தேயிலையையும், பழங்களையும் மிகுதி கறுவா பட்டைகளையும் நோனாவிடம் கொடுத்தான்.




அவனுடனேயே எனது மூன்று வருடங்கள் கழிந்தன. அவன் கணபதி தெய்யோ என பிள்ளையாரை கும்பிட்டான். இன்னும் பல மந்திரங்களை எனக்கு போட்டுக்காட்டினான். ஐந்து ரூபா குற்றியை தான் கையில் இருந்து மறையச் செய்தான். தான் கையில் பதினாரு விரல் இருப்பதாக சொல்லி எண்ணிக் காட்டினான். மறுகணமே பத்து விரல் தான் இருக்கிறது என காட்டினான். ஏராளமான சுரண்டல் ரிக்கற்றுகளை வாங்கினான். மாமியிடம் இருந்து குளிர்சாதன பெட்டி இ அயன் பொக்ஸை தவணை முறையில் வாங்கினான். தனக்கு பிறந்த பிள்ளையின் புகைப்படத்தை கொண்டு வந்து காட்டினான்.

மூன்று வருடங்கள் கழிந்த பின் அதாவது எனது ஐந்தாம் வகுப்பில் மாமாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. என்னை கூட்டிப்போக அப்பா அம்மா வந்தார்கள். கமகேயும் எங்களை பேருந்து நிலையம் மட்டும் வந்து அனுப்பி வைத்தான். பிறகு அவனும் தனது இடம் மாற்றம் பெற்று நுவரெலியாவுக்கே போகப் போவதாக சொன்னான்.

அதற்கு பிறகு சில வருடங்கள் கழிந்தன. யுத்தங்கள் இடப்பெயர்வுகள் என கழித்து வவுனியா ரவுணில் கவிதா புத்த நிலையத்திற்கு முன்பாக நின்ற போது எனது பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவது போல் இருந்தது. அங்கே ஒரு சைக்கிளில் கமகே நின்றிருந்தான். நிறைய தாடி வளர்ந்திருந்தான். தான் கச்சேரி வேலையை விட்டுவிட்டதாகவும் நுவரெலியாவில் தான் இப்போது தோட்டம் செய்வதாகவும் மனைவின் உறவினர்களை பார்க்க வவுனியா வந்தாகவும் சொன்னான். அன்றைக்கு பிறகு அவனை காணக்கிடைக்க வில்லை.

பிறகு மீண்டும் யுத்தம், இடப்பெயர்வு, மரணங்கள் என நானும் கடல் கடந்து தூரமாகி போனேன். எனது நண்பர்கள் what about sri lanka ? என கேட்கும் போது "கியலா வடக் நாய" என்பேன் சிரித்தபடியே..

My Blog List