வன்னிக்கோர் கடிதம்:தங்கச்சிக்கு சின்னண்ணா எழுதுவது..

நாட்கள் வந்துவிட்டன.
தடவும் கரங்கள் எதுமற்று
நான் நிற்கையிலும்
எனைச் சூழ்ந்து முழ்கடிக்க
துயரத்தின் சேதிகள்
காதுக்கெட்டின.
தோன்றிட உருவங்கள்
எதுவுமற்று,
தனித்தே கிடக்கிறதாம்
என் வீட்டு
நிலைக்கண்ணாடி

இனி என்ன எம் கனவுகளிலும்
சிருங்கார ரசம் வழியும்
நடனங்களை மறப்போம்.
எதுவுமற்ற ஊரினில்
நாய்களின்
ஊளையே கீதங்களென
எண்ணி இருப்போம்.
(வடக்கின் சேதிகள் மே 22, 2008)


அன்புள்ள அப்பா,அம்மா, தங்கச்சி அறிவது,
அப்பா நீங்கள் எனக்கு சொல்லித் தந்ததின் படி “நான் இங்கு நலமாய் இருக்கின்றேன், உங்கள் நலமும் அதுபோல் அமைய இறைவனை வேண்டுகின்றேன்” என்றுதான் வர வேண்டும். ஆனால் எனக்கு தெரியும் நீங்கள் அங்கு நிச்சயமாக நலமாக இருப்பப் போவதில்லை என்று.

ஆனால் உயிரோடாவது இருக்க வேண்டுமேன வேண்டுன்றேன். அம்மா, அப்பா, தங்கச்சி நீங்கள் என்னுடன் கதைத்து இன்றுடன் 386 நாட்களாகின்றது. இனிமேல் கடிதம் கூட உங்களை வந்தடையாது என்பது எனக்கு தெரியும். முதல் முறை நாங்கள் இடம்பெயர்ந்த போது எங்களுர் தபலகமும் எங்களுடன் சேர்ந்தே இடம்பெயர்ந்தே இருந்தது. நாங்கள் அங்கு போய் எங்கள் முகவரிகளை மீள்பதிவு செய்து கொண்டோம். ஆனால் இந்த முறை நீங்கள் , தர்மபுரத்தில் இருப்பதாகவும், விசுவமடுவில் இருந்தாகவும், புதுக்குடியிருப்பில் இருந்ததாகவும் யாரும் சொல்லும் போது, அந்த இடத்தில் இருந்தும் மக்கள் இடம்பெயர்வதாக புதினமும், சங்கதியும் சொல்லும்.

எல்லாவித முன்முடிவுகளோடும் இணையத்தளங்களில் வரும் பெயர்களை படிக்கின்றேன்.மீண்டும் மீண்டும்.... வெளியாகும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் உன்னிப்பாக பார்க்கின்றேன். எதிலும் நீங்கள் இல்லை தற்காலியமாக மூச்சு விட முடிகின்றது.

அம்மா, நீங்கள் என்னையும், அண்ணாவையும் ஒட்டுமொத்தமாக மன்னிக்க வேண்டும். உங்களுக்கும், அப்பாவுக்கும் உங்களின் மூன்று பிள்ளைகள் பற்றி இருந்திருக்க கூடிய கனவுகளில் ஒன்றைக் கூட நாங்கள் யாரும் நிறைவேற்றவில்லை.

அம்மா, நீங்கள் சோறு சாப்பிடாமல் விட்டு 17 வருசமாகின்றது. அண்ணா தனது சிவப்பு சைக்கிளை மாணவர் கலாசாலை ரியூட்டறிக்கு பக்கத்து வீட்டில் விட்டுப்போட்டு இயக்கத்திற்கு போனதில் இருந்து இன்றுவரை நீங்கள் சோறு சாப்பிடமால் விடுவதற்கு காரணங்கள் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கின்றது. நீங்கள் 17 வருசமா சோறும் சாப்பிடாமல், மச்சம் சாப்பிடுவதையும் விட்டு, கிழமையின் எல்லா நாட்களையும் விரத நாட்கள் ஆக்குமளவிற்கும் எந்த கடவுளும் இரக்கமே வரவில்லை.

அம்மா, நீங்கள் அடிக்கடி எங்கள் காணியில் நிற்கும் தென்னை மரங்களை எல்லாம் நீங்களும், பெரியம்மாவும் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வளர்ந்தாய் சொல்லுவீர்கள். ஆனால் நாங்கள் முதல் தடவை இடம்பெயர்ந்து திரும்பி வந்த போது மரங்களும், நாங்களும் பட்டுப்போயிருந்தோம். இருந்தாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எல்லா சந்தோசங்களையும் மிகுதியாய் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைந்து போடுவதிலேயே கண்டீர்கள்.

கடைசியா போனில் கதைக்கும் போது சொன்னீர்கள் தங்கச்சி கனவு கண்டவளாம்..தன்னை பாம்பு கொத்த கலைப்பதாக, இறுதியில் அவள் களைத்து கீழ விழுந்த போது, சின்னண்ணா வந்துதான் தன்னை கூட்டிக் கொண்டு போனதாகவும் சொன்னீர்கள். இப்போது அவள் எங்கே இருக்கிறாள்?. பாம்புகள் அவளை கலைத்திருக்க கூடும். செல்கள் அவள் அருகே வீழுந்திருக்க கூடும். ஆனால் அவளை தேற்றுவதற்கு அவளின் சின்னண்ணாவும், பெரியண்ணாவும் அவளருகே இல்லை. தங்கச்சி உன் சின்னண்ணாவை மன்னித்து விடு. நீ சோர்வுற்று கீழே வீழ்ந்திருந்தாலும் உன்னை தூக்க முடியாது இருப்பது கேவலம் தான். உன் வாழ்க்கையில் சின்னண்ணா உனக்கென்று ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை. நடு இரவுகளில் நித்திரை கலைந்ததும், அழத் தோன்றுகின்றது.

அப்பா, ஒரு முறை தங்கச்சியை நான் பேசிய போது, நீங்கள் எனக்கு அடிக்க வந்தீர்கள். அவளை பேசுவதை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத போது, இன்று அவள் எங்கிருக்கின்றாள் என்ற செய்தியை அறிய முடியாது இருப்பதிற்கு நீங்கள் அப்படி ஒரு குற்றமும் செய்யவில்லையே.

நாங்கள் ஆயிரம் தடவை சொல்லியும் நீங்கள் இடிந்திருந்த வீட்டை இரண்டாம் தடவை கட்டினீர்கள். பட்ட தென்னை மரத்திற்கடியில் இன்னொரு தென்னை வைத்தீர்கள். உடைந்த மதிலை அகற்றி, சீமை கிளுவை வேலி போட்டீர்கள். இவையெல்லாம் உங்களின் இறுதி வாழ்க்கைக்கு முதல் நீங்கள் அவளுக்கு சேர்க்க வேண்டும் என்று செய்தது. இறுதியில் எங்கள் வீட்டை, காணியை, வேலியை ஒரு நாளில் 5 வருடத்திற்கு முன்பு இருந்தது போல் ஆக்கிவிட்டிருப்பார்கள்.

எனக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிற்கும், ஆயிரம் வேண்டுதல்களுடனேயே தொலைபேசியை கையிலேடுகின்றேன். இந்த அழைப்பு எந்த கெட்ட செய்திக்காகவும் இருக்க கூடாது என்று.

அம்மா, அப்பா, தங்கச்சி தயவு செய்து நீங்கள் உயிருடன் வர வேண்டும். என் உயிரை கொடுத்தாவது உங்களின் மகனாய், உனது சின்னண்ணாவாய் நானிருப்பேன். ஆனால் நீங்கள் எனக்கு உயிருடன் வேண்டும்.

இப்படிக்கு..
உங்கள் அன்பு மகன், சின்னண்ணா

My Blog List