வன்னிக்கோர் கடிதம்:தங்கச்சிக்கு சின்னண்ணா எழுதுவது..

நாட்கள் வந்துவிட்டன.
தடவும் கரங்கள் எதுமற்று
நான் நிற்கையிலும்
எனைச் சூழ்ந்து முழ்கடிக்க
துயரத்தின் சேதிகள்
காதுக்கெட்டின.
தோன்றிட உருவங்கள்
எதுவுமற்று,
தனித்தே கிடக்கிறதாம்
என் வீட்டு
நிலைக்கண்ணாடி

இனி என்ன எம் கனவுகளிலும்
சிருங்கார ரசம் வழியும்
நடனங்களை மறப்போம்.
எதுவுமற்ற ஊரினில்
நாய்களின்
ஊளையே கீதங்களென
எண்ணி இருப்போம்.
(வடக்கின் சேதிகள் மே 22, 2008)


அன்புள்ள அப்பா,அம்மா, தங்கச்சி அறிவது,
அப்பா நீங்கள் எனக்கு சொல்லித் தந்ததின் படி “நான் இங்கு நலமாய் இருக்கின்றேன், உங்கள் நலமும் அதுபோல் அமைய இறைவனை வேண்டுகின்றேன்” என்றுதான் வர வேண்டும். ஆனால் எனக்கு தெரியும் நீங்கள் அங்கு நிச்சயமாக நலமாக இருப்பப் போவதில்லை என்று.

ஆனால் உயிரோடாவது இருக்க வேண்டுமேன வேண்டுன்றேன். அம்மா, அப்பா, தங்கச்சி நீங்கள் என்னுடன் கதைத்து இன்றுடன் 386 நாட்களாகின்றது. இனிமேல் கடிதம் கூட உங்களை வந்தடையாது என்பது எனக்கு தெரியும். முதல் முறை நாங்கள் இடம்பெயர்ந்த போது எங்களுர் தபலகமும் எங்களுடன் சேர்ந்தே இடம்பெயர்ந்தே இருந்தது. நாங்கள் அங்கு போய் எங்கள் முகவரிகளை மீள்பதிவு செய்து கொண்டோம். ஆனால் இந்த முறை நீங்கள் , தர்மபுரத்தில் இருப்பதாகவும், விசுவமடுவில் இருந்தாகவும், புதுக்குடியிருப்பில் இருந்ததாகவும் யாரும் சொல்லும் போது, அந்த இடத்தில் இருந்தும் மக்கள் இடம்பெயர்வதாக புதினமும், சங்கதியும் சொல்லும்.

எல்லாவித முன்முடிவுகளோடும் இணையத்தளங்களில் வரும் பெயர்களை படிக்கின்றேன்.மீண்டும் மீண்டும்.... வெளியாகும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் உன்னிப்பாக பார்க்கின்றேன். எதிலும் நீங்கள் இல்லை தற்காலியமாக மூச்சு விட முடிகின்றது.

அம்மா, நீங்கள் என்னையும், அண்ணாவையும் ஒட்டுமொத்தமாக மன்னிக்க வேண்டும். உங்களுக்கும், அப்பாவுக்கும் உங்களின் மூன்று பிள்ளைகள் பற்றி இருந்திருக்க கூடிய கனவுகளில் ஒன்றைக் கூட நாங்கள் யாரும் நிறைவேற்றவில்லை.

அம்மா, நீங்கள் சோறு சாப்பிடாமல் விட்டு 17 வருசமாகின்றது. அண்ணா தனது சிவப்பு சைக்கிளை மாணவர் கலாசாலை ரியூட்டறிக்கு பக்கத்து வீட்டில் விட்டுப்போட்டு இயக்கத்திற்கு போனதில் இருந்து இன்றுவரை நீங்கள் சோறு சாப்பிடமால் விடுவதற்கு காரணங்கள் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கின்றது. நீங்கள் 17 வருசமா சோறும் சாப்பிடாமல், மச்சம் சாப்பிடுவதையும் விட்டு, கிழமையின் எல்லா நாட்களையும் விரத நாட்கள் ஆக்குமளவிற்கும் எந்த கடவுளும் இரக்கமே வரவில்லை.

அம்மா, நீங்கள் அடிக்கடி எங்கள் காணியில் நிற்கும் தென்னை மரங்களை எல்லாம் நீங்களும், பெரியம்மாவும் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வளர்ந்தாய் சொல்லுவீர்கள். ஆனால் நாங்கள் முதல் தடவை இடம்பெயர்ந்து திரும்பி வந்த போது மரங்களும், நாங்களும் பட்டுப்போயிருந்தோம். இருந்தாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எல்லா சந்தோசங்களையும் மிகுதியாய் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைந்து போடுவதிலேயே கண்டீர்கள்.

கடைசியா போனில் கதைக்கும் போது சொன்னீர்கள் தங்கச்சி கனவு கண்டவளாம்..தன்னை பாம்பு கொத்த கலைப்பதாக, இறுதியில் அவள் களைத்து கீழ விழுந்த போது, சின்னண்ணா வந்துதான் தன்னை கூட்டிக் கொண்டு போனதாகவும் சொன்னீர்கள். இப்போது அவள் எங்கே இருக்கிறாள்?. பாம்புகள் அவளை கலைத்திருக்க கூடும். செல்கள் அவள் அருகே வீழுந்திருக்க கூடும். ஆனால் அவளை தேற்றுவதற்கு அவளின் சின்னண்ணாவும், பெரியண்ணாவும் அவளருகே இல்லை. தங்கச்சி உன் சின்னண்ணாவை மன்னித்து விடு. நீ சோர்வுற்று கீழே வீழ்ந்திருந்தாலும் உன்னை தூக்க முடியாது இருப்பது கேவலம் தான். உன் வாழ்க்கையில் சின்னண்ணா உனக்கென்று ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை. நடு இரவுகளில் நித்திரை கலைந்ததும், அழத் தோன்றுகின்றது.

அப்பா, ஒரு முறை தங்கச்சியை நான் பேசிய போது, நீங்கள் எனக்கு அடிக்க வந்தீர்கள். அவளை பேசுவதை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத போது, இன்று அவள் எங்கிருக்கின்றாள் என்ற செய்தியை அறிய முடியாது இருப்பதிற்கு நீங்கள் அப்படி ஒரு குற்றமும் செய்யவில்லையே.

நாங்கள் ஆயிரம் தடவை சொல்லியும் நீங்கள் இடிந்திருந்த வீட்டை இரண்டாம் தடவை கட்டினீர்கள். பட்ட தென்னை மரத்திற்கடியில் இன்னொரு தென்னை வைத்தீர்கள். உடைந்த மதிலை அகற்றி, சீமை கிளுவை வேலி போட்டீர்கள். இவையெல்லாம் உங்களின் இறுதி வாழ்க்கைக்கு முதல் நீங்கள் அவளுக்கு சேர்க்க வேண்டும் என்று செய்தது. இறுதியில் எங்கள் வீட்டை, காணியை, வேலியை ஒரு நாளில் 5 வருடத்திற்கு முன்பு இருந்தது போல் ஆக்கிவிட்டிருப்பார்கள்.

எனக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிற்கும், ஆயிரம் வேண்டுதல்களுடனேயே தொலைபேசியை கையிலேடுகின்றேன். இந்த அழைப்பு எந்த கெட்ட செய்திக்காகவும் இருக்க கூடாது என்று.

அம்மா, அப்பா, தங்கச்சி தயவு செய்து நீங்கள் உயிருடன் வர வேண்டும். என் உயிரை கொடுத்தாவது உங்களின் மகனாய், உனது சின்னண்ணாவாய் நானிருப்பேன். ஆனால் நீங்கள் எனக்கு உயிருடன் வேண்டும்.

இப்படிக்கு..
உங்கள் அன்பு மகன், சின்னண்ணா

15 comments:

தம்பி said...

மனம் விட்டு அழுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்.

உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக இருக்க இறைவனை நானும் வேண்டுகிறேன்.

said...

உங்களது குடும்பத்தினருக்காகவும் ஏனையவர்களுக்காகவும் இறைவனை வணங்குகிறேன்.

said...

உங்களின் அக்கறைக்கும், ஆறுதலுக்கும் நன்றிகள் தம்பி, வாசுகி

Anonymous said...

வணக்கம் கோசலன் வன்னிக்கோர் கடிதம்:தங்கச்சிக்கு சின்னண்ணா எழுதுவது.. காலத்தின் தேவை கருதி பிரசவித்திருக்கும் காவியம் இது. இதை படைத்ததற்காக வாழ்த்துச்சொல்ல முடியவில்லை பிரார்த்திக்கினறோம் ஈழத்தின் விடிவிற்காய்!!!!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

ruban:- i dont no wt i want to say 2 u at this time,,its a touchable,,
we ll hope soon u ll join ur family.i red this one it 4 u,,,,,
மீளும் எம் நிலங்கள்.


வீரம் உடுத்த மண்
விடுதலையைப் பெற்ற மண்
தீரம் மிகக்கொண்டு
திக்கெட்டும் முரசறைந்து - சந்ததிக்காய்
போரை ஏற்று
போர்க்களத்தில் வாழ்வமைத்து
பாரம் சுமக்கும் மண்
பரம பிதா வாழும் மண் - நாம்
மானமிழக்க மாட்டோம்
ஒருபோதும் மண்டியிடோம்

ஒதுங்க இடமின்றி
ஒரு கோடி இடப்பெயர்வு
நெருங்கி நின்று - எம்
நெஞ்சை உதைத்தாலும்
மருந்து மாத்திரைகள்
மண்ணெண்ணெய்த்தடை
இருந்து வருத்தும்
இயற்கையின் சீற்றங்கள்
வாட்டி வதைத்தெம்மை
வாழ்விழக்கச்செய்தாலும்
எண்ணத்தில் விடுதலையை
எப்போதும் இழக்கமாட்டோம்

வண்ணத்தில் மண்ணெடுத்து
வரலாற்றைக் குழைத்து
எண்ணற்ற வியர்வை சிந்தி
எழுப்பிய விடுதலையை
எம்மின மண்பற்றை
சன்னத்தால் சரிக்கேலா
சரித்திரமே எழுதிவை

பாழும் வறுமைத்தீ - படர்ந்து
விளை நிலத்தை
வாட்டி வதைத்தாலும் - வாடாமல்
விடுதலைப்பயிர்
நீட்டி நிமிர்ந்திங்கே
நிலை பெற்று வளர்கிறது
தோற்றுப்போகாத வன்னியில்
விடுதலைத்தீ
தொடர்ந்து எரிகிறது
கூற்றுவன் அருகில்தான் நின்று
கூவி அழைக்கிறான்
என்றாலும்
குனியாது எங்கள் தேசம்
காற்றில் பிரித்தெடுத்து
இங்கே நாங்கள்
விடுதலையை சுவாசிக்கிறோம் - ஆதலால்
ஈற்றில் விடுதலைக்காய்
ஆகுதி ஆனாலும்
சாதலில் எங்களுக்கோர்
சரித்திரம் இருக்கிறது

நேரம் வரும்
நெருப்பெடுப்பார்
காலம்ப்பார்த்து பிள்ளைகள்
காவடி எடுப்பார்
ஆடும்போது அகலக்கால்வைத்தோர்
ஆழம் அறிவார்
வேழம்படுத்த வண்ணிமண்
வீரம் அறிவர்
வேகம் எடுத்தெங்கள்
வேங்கைகள் பாய்வர்
சாகும் எதிரிப்படை
சரித்திரமே வியக்கும் வண்ணம்
மீளும் எம் நிலங்கள்.

said...

சின்னண்ணாவின் விருப்பு நிறைவேற பிரார்த்திக்கிறோம். இதைவிட வேறெதுவும் இப்போதைக்கு இல்லை.

Anonymous said...

மிக உருக்கமான பதிவு கோசலன்..

said...

சொல்ல வார்த்தை இல்லை நண்பரே

இறைவனிடம் இறைஞ்சுகிறேன்

Anonymous said...

உங்களது குடும்பத்தினருக்காகவும் ஏனையோர்களுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

said...

கோசலன்

உங்கள் மனதில் உள்ள பாரங்களை எழுத்தில் கொட்டி விட்டீர்கள் ஆனால் எனக்குத் தெரியும் அது இன்னமும் இறங்காது என்று. உங்கள் குடும்பம் பாதுகாப்பான வாழ்வில் வெகு சீக்கிரமே இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உண்மையில் எனக்கு இதை வாசித்ததும் உங்கள் நிலைக்கு மாறி விட்டேன்.

said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

said...

வெகு உருக்கம்.
//நடு இரவுகளில் நித்திரை கலைந்ததும், அழத் தோன்றுகின்றது.

சில நிமிடங்கள் இந்த வரிகளை வெறித்து பார்த்தபடி இருந்தேன்.
மிக அதிக விலை கொடுத்து சுதந்திரம் விடுதலை தேடி அலைகிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது

said...

Hey Ruban

Never worry

just only thing you need to remember

ENJOY LIFE

SATHEESH

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

My Blog List