நிலக்கிளியும், காட்டுக்கதைகள் கொஞ்சமும்


அண்மையில் கானாப் பிரபாவின் வலைப்பதிவில் “நிலக்கிளி” பாலமனோகரனது பேட்டியை படித்த பின் வாய்த்தால் நிலக்கிளி நாவலை படிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நிலக்கிளி என்பது உயரப் பறக்காத , நிலத்தோடு அண்டிய பொந்துகளில் வாழும் ஒரு வகை கிளியினம் என பாலமனோகரன் அவரது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது, கதை தான் வாழ்ந்த தண்ணிமுறிப்பு கிராமத்தை களமாக கொண்டது என்பதும் என்னை கவர்ந்தது. ஏனெனில், காடு பற்றி அம்புலிமாமாக்களிலும், பாலமித்ராக்களிலும் மாத்திரமே அறிந்திருந்திருந்த என்னை அநுவை. நாகராஜனின் “காட்டில் ஒரு வாரம்” என்னும் நூல் இன்னும் அது பற்றிய சுவாரசியத்தை அதிகமாக்கின. "காட்டில் ஒரு வாரம்" நூல் சிறுவயதில் காட்டில் தொலையும் ஒரு சிறுவன் மான்கூட்டத்துடன் சேர்ந்து வளர்வதும், பின் அங்கு காட்டில் விடுமுறை கொண்டாட வந்த அவர்களது சகோதரர்களால் அவன் கண்டு பிடிக்கப்படுவதுமான கதையை கொண்டது.




அதே அனேக அம்புலிமாமா கதைகளில் காட்டு வழியால் செல்லும் போது பிசாசுகளும், பூதங்களும், பேசும் மிருகங்களும் வந்து மறித்துக் கொள்வது வழமையானது. இவையெல்லாம் சேர்ந்து காட்டை இரசியங்கள் மிகுந்த ஒன்றாக எண்ணத் தோன்றியது. அவை உண்மையில் தீரா ரகசியங்களுக்குரியனதான்.

அது தவிர காட்டைச் சார்ந்துள்ள கிராமங்களை பற்றி செங்கை ஆழியன் எழுதிய பல நூலைகளையும் எனது பதினைந்து வயதிற்குள்ளாவே படித்திருந்தால் காட்டுக்கிராமம் சார்ந்த நாவல் என்று சொல்லப்பட்ட நிலக்கிளியையும் அப்பால் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசிக்க ஆரம்பித்ததும் நான் இந்த நாவலை முன்பு ஒரு முறை வாசித்திருப்பதான உணர்வு இருந்தது. அதற்கு சாட்சியாய் சில சொற்களும், சொற்றொடர்களும் என் மனசில் இன்னும் எஞ்சி இருந்தன.

இன்றைய காலத்திலோ இனி வரும் காலங்களிலோ இப்படியான களத்தை கொண்டு இன்னொரு நாவல் எழ வாய்ப்பில்லை எனவே நினைக்கின்றேன். ஈழத்தில் இல்லாமல் போனவைகளில் இதுவும் ஒன்று. நாவலில் வரும் முரலிப் பழத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் வீரைப்பழத்தை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன். இன்னுமொரு பத்து வருடங்களில் வீரைப்பழம் என்றால் என்னவென்று தெரியாத தண்ணிமுறிப்பு சிறுவன் இருக்க கூடும். (சில வேளை இப்போது இருக்கலாம்)

நிலக்கிளியை முதலில் வாசித்ததை விட இப்போது அதை இன்னும் ஈடுபாட்டோடு வாசிக்க கூடியதாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில் இதனை நான் வாசித்த போது இது எனக்கு கொஞ்சம் இது ஓவர் டோஸ். அதாவது கதையில் வரும் பதஞ்சலிக்கு கற்பு , காதல் என்ற வசனங்களுக்கு அர்த்தம் புரியாதது போல எனக்கு சில செய்கைகளுக்கும், சொற்களுக்குமான அர்த்தம் புரியவில்லை. இரண்டாவது முன்பு நான் அதை வாசிக்கும் போது காடு எனக்கு கனவாய் இருந்தது. இப்போது நான் அதை வாசிக்கும் போது காட்டை எனக்கு தெரிந்திருந்தது.

உண்மையில் இந்த பதிவை நான் எழுத முனைந்தமைக்கு நிலக்கிளியின் தாக்கத்தை விட , அது என்னில் கிளறி விட்ட காடு பற்றி நினைவுகளே காரணம் என்பேன். ஓரிரு நாட்களில் நாங்கள் இடம்பெயர்ந்து காடுகளின் கிராமங்களிற்கு போகையில் எனக்கு தெரியாது, இன்னும் சில வருடங்களிற்கு எங்களின் வாழ்க்கை இங்குதான் கழியப்போகின்றது என்று. இடம் பெயர்ந்து நாங்கள் போன ஊரில் ஒரே ஒரு உறவாக எங்களின் மாமாதான் இருந்தார். அவர்தான் படித்த வாலிபர் திட்டத்திலோ, அல்லது “வெளிக்கிடடி விசுவமடுவிற்கு” நாடகம் பார்த்தோ அங்கு வந்தவராக இருப்பர் என நினைக்கின்றேன். வாழ்க்கையில் நான் கண்டிராத நீளக்காணியும், தீர்த்தக் கேணி போன்ற பெரிய கிணறுகளும், நாள் தோறும் இறைத்துக் கொண்டிருக்கின்ற நீரிறைப்பிகளும், படங்களில் பார்க்கும் அருவி போல் அவை ஓடி பிரித்து செல்கையில் பலவேறாக ஆட்கள் நின்று பாத்தி மாறுவதும் மறக்க முடியாத ஒன்றுதான். பத்தி மாறுவதற்கு நான் நீ என்று சண்டை போடுவோம். ஏனெனில் அந்த காணியில் அப்போது 75 பேருக்கு மேல் இருந்தோம். எல்லோருக்கும் இது புதிதுதான்.

நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு எங்களின் உறவினர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவர் இன்னொரு காட்டுக்கரை கிராமமான முத்தையன்கட்டில் இருந்தார். ஒரு முறை அவருக்கு கட்டுத்துவக்கு வெடித்து அவரை பெரியாஸ்பத்திரியில் வைத்திருக்கும் போது போய் பார்த்தோம். அவர் வரும் போது மரை வத்தலோடுதான் வீட்டுக்கு வருவார். அதே போல் அது பருவங்களையொத்து பாலைப் பழமாகவோ, தேனாகவோ நீளும். நாங்கள் இடம் பெயர்ந்து போன பின்பு அதே போல மான்களை பார்க்கவும், பாலைப்பழம் பிடுங்கவும் ஆசைப்பட்டேன். ஆனால் இது முத்தைஐயன் கட்டு அல்ல. அதற்கு முன்னால் உள்ள இரண்டும் கெட்டான். (இரண்டு கெட்டான் என்பது காடுகள் அப்படியே இருக்க, மனிதர்களிடையே கொஞ்ச வசதிகள், நீரிறைப்பிகள், உழவியந்திரம் என்று) அது இப்போது எங்களை போன்று வந்து குவிந்தவர்களால் முழுக்க கெட்டானாகி மான்கள் மறைய , மலேரியா என்னும் மிருகத்தைத்தான் பார்க்க முடிந்தது. ஆனால் நிலம் தழையத் தழைய இருக்கின்ற பாலைப் பழங்களை சொண்டுகள் இரண்டும் ஒட்டும் வரை சாப்பிட்டு இருக்கின்றேன். பிறகு வந்த இரண்டு வருடங்களில் ஆறு மணிக்கு யானை உலவுகின்ற அந்த வீதிகளில் எந்த இரவில் போனாலும் யானைகளை காணக்கிடைப்பதில்லை.(நாங்களெல்லாம் முறம் இல்லாமலே யானை விரட்டின ஆட்கள் ) என் சிறுவயது காட்டை அண்டிய கிராமத்து சில வருட வாழ்க்கை இன்னுமோர் பதிவிற்குரியது. இப்போது நிலக்கிளி பற்றி சொல்லப் புறப்பட்டு காட்டில் பாதை தவற விட்டவனாக எங்கோ வந்து தொலைந்து விட்டேன்.

நிலக்கிளியை வாசிக்க தொடங்கும் போதே இப்படி நீங்கள் அந்த நாவலினுள் தொலைந்து போவதை காணலாம். காட்டோடான சிறுவயது ஞாபகங்கள் எதுவும் உங்களிற்கு இருந்தால் அது இன்னுமதிகம் சாத்தியம். காட்டை, காட்டின் மிருகங்களை, அங்கிருக்கும் மனிதர்களின் மனங்களை, காட்டை வெல்லும் அவர்களின் மன உறுதியை மிக எளிய நடையில் சொல்வது அவ்வாறு சுயஅனுபவம் வாய்த்தவரை தவிர வேறு ஒருவரால் கடினமானது.

உதாரணமாக

"பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம்! பூச்சி குத்திப்போடும்!' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.

'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன்"

என்ற வரிகளில் ஒரு நாய் , அதுவும் குறிப்பாக காட்டுப்புறத்திலே இருக்கும் நாய் திடீரென்று ஒரு திசையை நோக்கி அதன் முன்னிரண்டு கால்கள், காதுகள், கண்கள், மூக்கு என எல்லாவற்றையும் நேராக்கும். அப்படியே சிலை போல ஒரிரு நிமிடங்கள் நிற்கும். பின்பு அப்படியே மெதுவாக முதலில் கிண்டி வைத்த கிடங்கில் படுத்துவிடும். பாய்வதற்கு தயாராகுமே ஒழிய சரியான சந்தர்ப்பம் அமையாவிடில் பாயாது. ஆக அதன் வாழ் நாளில் தயாராகுதல் தான் அதிகம் நடக்கும். தேவையில்லாததற்கும் சேர்த்து. இது எங்களுக்கு ஞாபகம் இருக்குயொழிய சரியான வார்த்தைகளில், சரியான இடத்தில் சொல்ல வராது. அது அவருக்கு வந்திருக்கிறது.


பல இடங்களில் ஒரு காட்டுக்கிராம வாழ்க்கையை சொல்லும் பாலமனோகரன், புயல் அடிப்பதான ஒரு இடம் மட்டும் எனக்கு சற்று சினிமாத்தனமாக படுகின்றது. அங்கு நிகழ்கின்ற உடலுறவை சொல்லவில்லை. அது நிகழ்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம்தான் அப்படியிருக்கின்றது.

ஆனாலும் நினைத்தாலும் கிடைக்க முடியாத அந்த வாழ்க்கை தொலைத்தவர்களிற்கு இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க இதுவொரு சந்தர்ப்பம் தான்
அட்டைப்பட உதவி - கானா பிரபா

நூலகத்தில் நிலக்கிளியை வாசிக்க

கானா பிரபாவின் வலைப்பதிவில் பாலமனோகரனின் பேட்டி

2 comments:

said...

இப்போ தான் முதன் முதல் வந்திருக்கிறேன்.

நிலக்கிளியை இன்னும் முழுமையாக வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும்.

உங்கள் கதை ஒன்றையும் வாசித்தேன். மிகுதி பதிவுகளை இனி தான் படிக்க வேண்டும்.

படித்த பதிவுகளின் நடை நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்.

said...

நன்றி வி.ஜெ.சந்திரன் இந்த பதிவை தேடிப் பிடித்து படித்தமைக்கு. சில வேளைகளில் எனது பதிவை தமிழ்மணம் விழுங்கி விட்டதோ என்று எண்ணும்படியாக மளமளவென இடுகைகள் குவிந்து எனது இடுகையை ஓரங்கட்டிவிடுங்கள். இப்போதும் பாருங்கள் நான் எதற்குள்ளோ போட , அது வகைப்படுத்தாதவைக்குள் போயிருக்கின்றது.

சரி, அதை விடுங்கள். நிலக்கிளிக்கு இப்போதுதான் இணைப்பு கொடுத்துள்ளேன். மற்றவர்களுக்கும் வாசிக்க சுலபமாக இருக்கும்.

மற்ற இடுகைகளையும் வாசித்து விட்டு தவறாது கருத்து சொல்லுங்கள்.

My Blog List