யாழ்.ஜீவநதி பற்றிய பார்வையும், செங்கை ஆழியான் சொல்லும் "தமிழ்நாட்டு அப்ளாசும்"


யாழில் இருந்து ஜீவநதி என்னும் பெயரில் கலை இலக்கிய ஏடு ஒன்று வெளிவரத் தொடங்கியுள்ளது. இரு மாதங்களிற்கு ஒரு முறை வரும் இந்த சஞ்சிகையின் இரண்டாவது சஞ்சிகை கிடைத்தது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கும், மருந்து பொருட்களிற்கும், கப்பலை எதிர்பார்த்துக்கொண்டும், மாலை ஆறு மணிக்குள் அடங்கி போகின்ற நாட்களையும், கொலைகள் நிறைந்த பகல்களையும் கொண்ட யாழில் இருந்து இன்றைய சூழ்நிலையில் இந்த “ஜீவநதியின்” வருகை ஆச்சரியத்திற்குரியதொன்று. ஒரு சில மாதங்களிற்கு முன்னர் படித்த செய்தியில் உதயன் நாளிதழ் வெளியிட ஏற்பட்ட தாள்களின் தட்டுப்பாட்டால் குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டு கடை வாசலில்களில் ஒட்டப்பட்டு படிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு இருந்தது. ஒரு பிரதான பத்திரிகையொன்றிற்கே இந்த நிலை ஏற்படுகின்றதை பார்த்துக் கொண்டு இப்படியான சஞ்சிகையை தொடக்குவதற்கு அவர்களிற்கு ஏற்பட்ட துணிவை நினைக்க நினைக்க மீண்டும் பாராட்ட தோன்றுகின்றது. அவர்களிற்கு அந்த சஞ்சிகையை விலை கொடுத்து வாங்குவதையும், இன்னும் ஐந்தாறு பேருக்கு அறிமுகத்தை செய்வதை தவிர பெரிதான உதவி ஒன்றையும் நாங்கள் இப்போது செய்து விட முடியாது தானே.

யாழ்ப்பாணத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஏராளம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதும் இதே கஸ்டங்கள் இருந்தன. ஆனால் உயிருக்கு பயம் குறைவாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இடைவேளையில் வகுப்பறைக்கே நெம்பு, நங்கூரம், சாளரம், வரதரின் அறிவுக்களஞ்சியம், விளக்கு, வெளிச்சம், உலகஉலா என பல இதழ்கள் வரும். புது இதழ்களை தேடி நாங்கள் போவதில்லை. அது வகுப்பறைக்கே வரும். இப்போது எப்படியோ தெரியாது.

ஜீவநதியும் நிறைவாக வந்திருக்கின்றது. கவிதைகளை சோ.ப, கல்வயல்.வே.குமாரசாமி, த.ஜெயசீலன், ச.நிரஞ்சனி, எழில்வேந்தன், த.அஐந்தகுமார்,ஏ. இக்பால், இ.சு.முரளிதரன், யோ. யோகானந்தி ஆகியோர் எழுதி இருக்கின்றார்கள். இவை மரபு, புதுக்கவிதைகள் என பலவாயும் வந்திருக்கின்றது. த. அஐந்தகுமாரின் சொற்கள் பற்றி இரு கவிதைகள் என்னை கவர்ந்தது.

சொற்கள் பற்றிய இரு கவிதைகள்.

எச்சில் விழுங்கு
இன்னும் விழுங்கு
தொண்டைக் குழிக்குள்
துள்ளிக் குதித்து
எட்டாது களைக்கும்
சொற்களின் கவலை
நாளெல்லாம்
உன் முகத்தில்
எழுதப்பட்டு கிடக்கட்டும்.
----------------------------------------


என்னைச் செரிக்கும்
வலிகளின் நிமித்தம்
சொற்கள் வரமுடியாது
மௌனம் பிசைகிறது
புகைச்சுருளாய்
காற்றைத் தழுவி நிற்கும்
தனித்து விடப்பட்ட
‘சொற்கள்’
சுயமைத்துனத்தின்
அந்தரங்கமாய்
‘என்னோடு’
மட்டுமே புரள்கின்றது.

சிறுகதைகளை அநாதரட்சகன், மயூரரூபன், குந்தவை ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். மேலோட்டமாக மூன்று சிறுகதைகளும் நன்றாகவே இருக்கின்றன. இருந்தும் இவை பற்றிய சில எண்ணங்கள் எனக்குண்டு. அநாதரட்சகனின் ‘மனச்சிறை’ என்னும் சிறுகதை கணவனை தொலைக்கும் மனைவியின் எண்ணங்களும், இறுதியில் மாமியார் அவளை ராசியில்லாதவள் என்றும், அவள் வந்த பிறகே தன் மகன் தொலைந்தாக பேசுவதாகவும் முடிகின்றது. இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த சிறுகதையில் ஒரு விஷயம் கணவன் தொலைவது. யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு எத்தனை இளைஞர்களைத் தொலைக்கின்றது. அவர்களின் மனைவி, குழந்தை, உறவுகளின் நிலை எப்படி இருக்கும்?

இவர்களின் பிரதிநிதியாய் கதையின் நாயகி வருகிறாள் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால் கதை அவள் பெண் என்ற ரீதியில் எழும் இன்னொரு புதிய பிரச்சனைச் சொல்லி முடிகின்றது.

உண்மையில் இரண்டுமே பெரிய விஷயங்கள். ஒரு மனிதனின் தொலைவு எவ்வளவு பெரிய விஷயம்? பல வருடங்கள் அந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் ஒரு சில மணிநேரங்களில் காணாமல் போவதும், அதற்கு எந்தச் சலசலப்பும் இல்லாது சமூகம் அடுத்த நாளை நோக்கி இருக்க, ஒரு தனி மனுசியாய் அவள் எதிர்கொள்ளும் வேதனையின் உச்சம் இந்த கதையில் இல்லை எனவே நினைக்கிறேன். சில வேளை கதை ஆசிரியருக்கும் அது அங்கு ஒரு சாதாரணமாய் போனதின் விளைவாய் அதன் வீரியம் சரியாக எழுத்தில் வரவில்லையே என்னவோ.

மயூரரூபனின் வைரவர் உலா என்னும் சிறுகதையின் நடை நன்றாக இருக்கின்றது. ஆனால் இராணுவத்தினரை நாய் என்றும் பேய் என்றும், மாடு என்றும், வைரவர் என்றும் உருவகப்படுத்துவது கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் வன்னியில் இருந்து எழும் இலக்கியங்களில் காணப்படும் ஒரு போக்கு. அது வாசிக்கையில் ஒரு வித சலிப்பை தர முனைக்கின்றது. ஆனால் மயூரரூபன் இதே நடையில் இன்னும் நல்ல சிறுகதைகளை தரமுடியும்.

குந்தவையின் "சொல்லமாட்டாளா?" என்னும் சிறுகதை நன்றாகவே இருந்தது. சில வரிகளிற்கான இடைவெளிகள், மேற்கோள் குறிகள் சரியான இடத்தில் இடம்பெறாமை வாசிக்கையில் சிறு கரைச்சல் தரப்பார்க்கின்றது. அது ஒரு அச்சகப் பிழை.

கட்டுரைகளை செ.திருநாவுக்கரசு, அம்மன்கிளி முருகதாஸ், மௌனகுரு, தெணியான், கி.நடராசா, பரணி, க.திலகநாதன், பா. அகிலன், லம்போதரன் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள்.

மௌனகுருவின் கூத்துக்கலை செயற்பாடுகளில் ஒரு சாஸ்திரிய இசைக்கருவியான மிருதங்கத்தை இசைத்தவரான இரத்தினம் மாஸ்டர் பற்றிய கட்டுரை நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒன்று. அதே போல் தெணியான், பா.அகிலன், லம்போதரன், என ஏனைய கட்டுரைகளும் கவனிக்கத்தக்கவை.

நேர்காணலில் செங்கை ஆழியானின் நேர்காணல் வந்திருக்கின்றது. கேள்விகளும் கனமானவையே. இங்கே ஒரு கேள்வியும் பதிலும் தருகின்றேன். எனக்கு செங்கை ஆழியான் என்ன சொல்லுகிறார் என்று சரியாக விளங்கவில்லை.

கேள்வி - இலக்கிய உலகில் புலம்பெயர் இலக்கியங்கள் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. புலம்பெயர் இலக்கியம் குறித்துத் தங்கள் கருத்தென்ன?

புலம் பெயர் இலக்கியங்கள் இன்று முதன்மை பெற்று வருகின்றன. புலம் பெயர் இலக்கியங்கள் இருவகையான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ஆரம்ப கால இலக்கியங்கள் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் இருந்தன. ஈழத்தில் தம் அனுபவங்களையும் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவை பேசின. பின்னர் அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளரின் குறிப்புக்களாக இருந்தன. ஈழத்தின் துயரங்களை இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில் வாழாமல் பதிவு செய்ய முடியாது. பட்டினி தேசமாக மாறிவிட்ட யாழ்ப்பாணத்தின் துயரங்கள் தெரியுமா? தீ விட்டெரியும் கிழக்கின் அவலங்களைக் கற்பனையில் காணமுடியுமா? நாசி முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படும் அவலங்களை அனுபவிக்க முடியுமா? வீதிகளில் அவமே செத்துக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்கள் வெளியிடும் கனவுகளை உணர முடியுமா?
இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான் கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்து தமிழ்நாட்டின் அப்ளாஸைப் பெறப்போகிறீர்கள்? அவை ஈழத்து தமிழ் இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள்.அது முத்துலிங்கத்திற்கும் பொருந்தும் அதேபோல எஸ்.பொன்னுத்துரை, வி. கந்தவனம், குறமகள், அரவிந்தன், ஷோபா சக்தி, ஜெயபாலன், சேரன், ஆழியாள் முதலான தமிழ் புலம் பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும். புதிய படைப்பாளிகள் அவர்களில் பலர் இன்று தாம் வாழ்கின்ற நாட்டில் அனுபவிக்கும் துயரங்களை எழுதி வருகின்றார்கள். எங்களுக்குப் பரிச்சயமில்லாத களமாக அவையுள்ளன. நெஞ்சைப் பிடித்துக் கொள்கின்றன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற பரம்பரையும் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வரும். வருவது அந்தந்த நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக அமையும்.
ஜீவநதியின் தொடர்புகளுக்கு.
தொலைபேசி
0094775991949
0094776991015
தொலைநகல்
0094212263206
மின்னஞ்சல்
முகவரி
கலை அகம்
சாமணந்தறை
ஆலடிப்பிள்ளையார் வீதி
அல்வாய்
யாழ்ப்பாணம்

6 comments:

said...

கோசலன் நல்லதொரு சஞ்சிகையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.செங்கை ஆழியான் சொன்னதில் என்ன உங்களுக்கு விளங்கவில்லை?
புலம்பெயர் இலக்கியம் பற்றி தனது ஆதங்கத்தைக் கூறும் அவசரத்தில் மிக மேலோட்டமான விமர்சனம் ஒன்றை செங்கை ஆழியான் முன் வைத்திருக்கிறார்.மிகவும் விரிவாகப் பேசப்படவேண்டிய விடயமொன்றை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் சொன்னாரா அல்லது அவர் சொன்னவற்றை சஞ்சிகை சுருக்கி விட்டதா தெரியவில்லை ஆனால் அவர் சொன்ன கருத்து மிக முக்கியமானது

புலம்பெயர்தல் என்பதை செங்கை ஆழியான் எந்த வரைவிலக்கணத்தை வைத்துப் பார்க்கிறார் என்பது தெரியவில்லை.25 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் முதல் இன்றைக்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் அந்நிய மண்ணில் காலடி எடுத்து வைக்கும் இன்னொரு ஈழத்தமிழன் வரை இலக்கியப் படைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது புலம்பெயர்ந்தவர்கள் படைப்பெல்லாவற்றையும் புலம்பெயர் படைப்பு என்று வகைப்படுத்துவதும் சரியாகத் தோன்றவில்லை.அதே நேரம் நேற்றுத்தான் ஈழத்திலிருந்து வந்தவன் அங்கேபட்ட துயரங்களை எழுத்தில் வடிக்கும் போது ஈழத்தைப் பற்றி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்பதும் சரியாகப் படவில்லை
அதேநேரம் புலம்பெயர்ந்து பல தசாப்தங்கள் ஆகியும் காலாவதியாகிப்போன நினைவுகளை ஈழத்து இலக்கியமாகப் படைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கவும் எரிச்சல் வருகிறது
இதைப் பற்றி இங்கே விரிவாகப் பேச விருப்பம் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்

said...

ஈழநாதன்,
நான் செங்கை ஆழியானின் பேட்டியில் விளங்கவில்லை என்று சொன்னது புலம் பெயர் எழுத்தாளர்கள் தமது முன்னைய அனுபவங்களை வைத்து எழுதுவது பிழை என்று சொல்லுகின்றரா? அல்லது அவை தமிழ்நாட்டின் அப்ளாசை பெறுவதினால் சொல்லுகின்றாரா என்றுதான்.

ஆனால் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது முன்னைய அனுபவங்களை எழுதக் கூடாது என்றில்லைத்தானே. இதற்கு முன்னரும் ஈழம் பட்டினியாய் கிடந்திருக்கின்றது. படை முகாம்களிற்கு இளைஞர்கள் இழுத்து செல்லப்பட்டிருக்கின்றார்கள். இளைஞர்கள் வீதியில் கொல்லப்பட்டு இருந்திருக்கின்றார்கள். அவைகளின் சாட்சிகளாய் புலம்பெயர் எழுத்தாளர்கள் இருந்தால் அவற்றை அவர்கள் எழுதுவதினால் என்ன தவறு. இன்ன காலத்திற்குள் இந்த படைப்பு எழுதி வெளியிடப்பட வேண்டும் என்றுத்தானே. தவிர தமிழ்நாட்டு அப்ளாசை குறி வைத்து எழுதாமல் இயல்பாக எழும் படைப்புக்குக்கு தமிழ்நாட்டு அப்ளாஸ் கிடைப்பது பெருமைதானே. உண்மையில் தமிழ்நாடு மட்டுமல்ல எங்கிருந்து அப்ளாஸ் வந்தாலும் அது படைப்பின் வெற்றி தானே

said...

இன்று வரை எது இலக்கிய வகைக்குள் அடங்கும் அடங்காது எது அதுக்கு வரையறை என்ன என்று தெரியாத நான் இதை பற்றி கொஞ்ச பேச தயங்கினாலும் எனக்கு பட்டதை சொல்றன். ஈழநாதன் சொன்னமாதிரி எவ்வளவு காலத்துக்கு முன் பெயர்ந்தவர்கள் தாயக நினைவுகளை எழுவது அர்த்தம் இல்லை என்று சொல்லுவதில் உடன்பாடில்லை. செங்கையாழன் கூட எப்பவோ காலவாதியான நினைவுகளை இரை மீட்டு தான் இலக்கியம் படைத்தார்.

புலம் பெயர்ந்தவர்கள் நிஜத்தில் தாயகத்தின் சூழ்நிலையை விட்டு எங்கோ வாழ்பவர்கள் . அவர்கள் தாயகத்தை மட்டும் எதாவது எழுதவது என்றால் நினைவுகளைதான் எழுத முடியும்.அப்படி அல்லாத ஒன்றை எழுத வேண்டுமென்றால் அவன் அனுபவித்து உணர்ந்திராத காது வழி செய்திகளைத்தான் படைப்பாக தரமுடியும்.
சமகால நிகழ்வுகளை தான் படைப்பாளி தரவேண்டுமானால் புல படைப்பாளியை வலுகட்டயமாக தாயகத்தின் சூழ்நிலையிலிருந்து தூரத் தள்ளிவிடுகிறீர்கள்

எழுத்தாளர் இந்திரா பாத்தசாரதி டில்லி பல காலமாக வசித்து கொண்டு இருப்பதால் அவருக்கு காவிரி கரையில் இருக்கும் கிராமத்தை பற்றி கதையின் கரு களமாக வைத்து எழுதுவது பொருத்தமாய் இல்லை என்று இலக்கிய பெருந்தகைகள் அந்த காலம் கூறியது ஞாபகம் வருகிறது.

said...

//செங்கையாழன் கூட எப்பவோ காலவாதியான நினைவுகளை இரை மீட்டு தான் இலக்கியம் படைத்தார்.//

அப்படியா? எந்த நாவல்கள் என்று குறிப்பாக சொல்ல முடியுமா?

said...

//யாழ்ப்பாணத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஏராளம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதும் இதே கஸ்டங்கள் இருந்தன. ஆனால் உயிருக்கு பயம் குறைவாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இடைவேளையில் வகுப்பறைக்கே நெம்பு, நங்கூரம், சாளரம், வரதரின் அறிவுக்களஞ்சியம், விளக்கு, வெளிச்சம், உலகஉலா என பல இதழ்கள் வரும். புது இதழ்களை தேடி நாங்கள் போவதில்லை. அது வகுப்பறைக்கே வரும்.//

மிகவும் உண்மை.

//புலம்பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற பரம்பரையும் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வரும். வருவது அந்தந்த நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக அமையும்.//

இது மிகவும் யதார்த்தமான கருத்து.

மேலும் இன்னார் இன்னதைதான் எழுதவேண்டும் என்பது ஒரு குறுகிய சிந்தனையே. அவரவர் வலிகள் அவர்களுக்கு.. இதில் நல்லதையும் கெட்டதையும் வாசகர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். வாசகர்களை உரியமுறையில் சென்றடைவதே நல்ல இலக்கியங்களுக்கான சவால்.

சஞ்சிகையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கோசலன். உங்கள் எழுத்தாக்கம் அருமை. நீங்கள் இன்னும் எழுதலாமே..?

said...

//உங்கள் எழுத்தாக்கம் அருமை. நீங்கள் இன்னும் எழுதலாமே..?//

பாராட்டுக்கு நன்றி. கட்டாயம் எழுதுவேன்.

My Blog List