பட்டியல் பெருத்தவள்

முதல் முத்தம்
முதல் பார்வையென
எதுவுமே இல்லை எங்களிடத்திலே,
எப்போதோ
நான் வலிந்து தந்த முத்தத்தின் ஈரத்தின்
இறுதிக் கதகதப்பையும் உன் கன்னங்களில்
இருந்து எடுக்க இப்போது வரை போராடிக்கொண்டிருக்கிறாயேமே?
அது உன் கையோடு போகையில்
இனி எப்போதும்
எப்போதுமே...
உன்னால் பெறமுடியாத
முத்தம் அது என்பதை உணர்வாய்.

உன்னிடமும் என்னிடம் எங்களின்
புகைப்படங்கள் எதுவுமில்லை.
காதலுக்கு அவை சாட்சிகளில்லைத்தான்
ஆனால் என் புகைப்படமாவது உன்னிடமிருந்திருக்கலாம்
எனினும்
பராவாயில்லை என்னிடம்
பாழாய் போன சில நினைவுகள்
இருக்கின்றது.
உன்னிடம் என் நினைவாய் என்ன
எஞ்சப்போகின்றது?

உனக்கென ஒரு கவிதை எழுத
நினைத்திருந்தேன்.
என்னிடம் இருந்த எல்லா வார்த்தைகளுக்கும்
சொந்தக்காரியாக நீயே இருந்த போது
அது எழுதப்படாமலே போயிற்று.
உனக்கு தானே அன்பே என்பதும் ஆருயிர் என்பதும்
பிடிக்காது என்பாயே..
நான் ஒரு முட்டாள்
என் வாயிலில் எது வந்தாலும்
உனக்கு அது
பிடிக்காது என்பதின் மறுவார்த்தை அது
என்பதை புரிந்துக்கொள்ள தவறினேனே?
இப்போதும் பார்,
என் துரதிஸ்ரம், எனக்கும் உனக்குமான இந்த
கவிதையை நான் எழுதுகையில்
வாசிப்பவன் நான் மட்டுமாய் இருக்கின்றேன்.

நான் எப்போதாவது உன்னிடம் வியாபாரியாக
நடந்ததில்லையே..
ஒரு பண்டமாற்றுக் காலத்தவன் போல்
என்னிடம் இருக்கும் எல்லாப் பிரியங்களையும்
உன்னிடம் தருகின்றேன்.
உன்னிடம் இருக்கும் எல்லா பிரியங்களையும்
எனக்குத் தா என்றேன்.

மரணத்தின் மறுவாசல் நீயே
என்றாலும் இன்று வரை அதில்
நுழையவே விரும்புகின்றேன்.
இப்போதும் என்னை எரியும் என்னை
அணைப்பதற்கு
ஏதேனும் ஒரு வார்த்தையுடன் என்னிடம்
வருவாய் என்ற நம்பியிருக்கின்றேன்.

உன் பிரியங்களின் பட்டியலில் என் பெயர்
தேடியே அலைந்த அயாசம்
இருக்கிறதெனினும்
ஒரே ஒரு கேள்வி உன்னிடம் கேட்க இருக்கிறது
என்னிடம் உனக்கு காதல் வந்த போது
உன் பட்டியலில் நான் எங்கிருந்தேன்?

5 comments:

said...

குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு எல்லா வரிகளும் அருமை... கலக்கல் !

said...

பின்னூட்டத்திற்கு நன்றி புனிதா. எப்படி என் வலைப்பதிவு உங்களின் பார்வைக்கு பட்டது? ஏனெனில் இது எப்போதாவது அரங்கத்திற்கு வரும் ஒன்று. அதுதான் கேட்கின்றேன்.

said...

உனக்கென ஒரு கவிதை எழுத
நினைத்திருந்தேன்.
என்னிடம் இருந்த எல்லா வார்த்தைகளுக்கும்
சொந்தக்காரியாக நீயே இருந்த போது
அது எழுதப்படாமலே போயிற்று.//

உண்மையாகத் தெரிந்த வரிகள் இவை.. அழகான கவிதை கோசலன்,, வாழ்த்துக்கள்..

எனக்கும் உனக்குமான இந்த
கவிதையை நான் எழுதுகையில்
வாசிப்பவன் நான் மட்டுமாய் இருக்கின்றேன்.//


இப்ப தான் நாங்களும் இருக்கிறோமே..

said...

//உண்மையாகத் தெரிந்த வரிகள் இவை.. //

ம்ம்.... :)

//இப்ப தான் நாங்களும் இருக்கிறோமே..//

நன்றி லோசன் உங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும்..

sha said...

மிகவும் அருமையான கவிதை ...
உணர்பூர்வமான உயிரோடமான வார்த்தைகள்
வாழ்த்துக்கள் கோசலன்

My Blog List