நான் முற்றத்தில் இருக்கிறேன்.


அம்மா நான் முற்றத்தில் இருக்கின்றேன்.
மழை கிளறும் மண்வாசனையையோ
இலைகளிடை தெரியும் நிலவினையோ
நான் ரசித்தபடியில்லை.

என் மரணத்திற்கான அழைப்பு
தெரு முடக்குக்கு வந்துவிட்டது.
நாய்களின் குரைப்புகளை தாண்டி
எழப் போகும் ஓரோசையை கேட்டபடியே
நீ உள்ளிருப்பாய்....

எனக்கான உன் ஆயிரம்
நேர்த்திகள் தோற்றுவிட்டதாய்
அப்போது உணராதே...

என் பிறப்பை போலவே
என் வாழ்வும் இப்போது உனக்கு
எனக்கும் வரமாயிருக்க
நேர்ந்ததே..

இருள் கவியும் பொழுதுகளில்
நான் காவி வந்தவைகளை அறியாமலே
நீ பிட்டு அவித்த படியிருப்பாய்.

என்னை சூழ்ந்த உன் கற்பனைகளையும்
காலையில் ஒலித்த கோவில் மணியையும்
அப்பாவின் தேவாரங்களையும் தாண்டியே
நாங்கள் போனோம்.

நேற்று வந்த பொழுதுகள் எமை கவ்வி
நாளை எழுத அழைத்திற்று.
காற்றைப் போலவும், நீரைப்போலவும் நெருப்பைப்
போலவும் எமையுணர்ந்தோம்.

கட்டைகள் கிழித்தறிந்த காயத்தை
ஒரு துணியில் மறைத்த போதுவுன்
சேலைச் சூட்டை மறந்தோம்

கசகச இருட்டினில் உன்னை அழைத்து,
பிட்டை தின்றபடியே அழுமுன் கண்களில்
முன் எங்கள் இலட்சியங்கள் கூறி நின்றோம்.

உன் நேர்த்திகள் பலித்ததாய் கொண்டாடும்
பொழுது நேற்று வாய்த்ததுனக்கு,
இன்றிரவும் பிட்டை தின்றபடி சொல்ல
இலட்சியங்கள் எதுவும் என்னிடம் இல்லை
என்றாலும்..

இவரென்றும் அவரென்றும் அறியாதவர்
என்னை உடல் என்று ஆக்கும் போது,
கூச்சலிடாதே, கத்தியழதே, வெளியே வராதே.
இன்னும் நீ
இன்னொருத்திக்கும் நேர்த்தி
வைக்கவும்
விரதம் இருக்கவும் வேண்டியிருக்கிறது
அம்மா.

8 comments:

said...

நீங்கள் எனக்கிட்ட பின்னூட்டத்தைத் தொடர்ந்துவந்தேன்.

"இவரென்றும் அவரென்றும் அறியாதவர்
என்னை உடல் என்று ஆக்கும் போது..."என்ற வரிகள் மிக வருத்தின. கடைசி வார்த்தைகளைக் கூடப் பேச அனுமதியாத மரணங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதென்பது கொடுமையிற் கொடுமை. என் செய்வோம்... இவ்விதம் வாழவே விதிக்கப்பட்டோம். உங்கள் பக்கத்திற்கு முதன்முதலாக வந்திருக்கிறேன். இப்படித்தான்....உண்மைகள் எப்போதும் உயிர்ப்புடன் பேசப்படும் பக்கங்களைத் தவறவிட்டுவிடுகிறேன். இனி வருவேன்.

said...

//இவரென்றும் அவரென்றும் அறியாதவர்
என்னை உடல் என்று ஆக்கும் போது,
கூச்சலிடாதே, கத்தியழதே, வெளியே வராதே.
இன்னும் நீ
இன்னொருத்திக்கும் நேர்த்தி
வைக்கவும்
விரதம் இருக்க வேண்டியிருக்கிறது
அம்மா.
//

இந்த வரிகள் மனதை பிசைந்தது.

நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே

பஹீமாஜஹான் said...

பிசாசு......... :)
இந்தக் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.
இதே போன்ற நல்ல கவிதைகளுடன் இந்த வலைப்பூவைத் தொடர வாழ்த்துகிறேன்.
அன்புடன்
பஹீமாஜஹான்

said...

நன்றி தமிழ்நதி,
உங்களை போன்றவர்களின் வரவை தக்க வைத்துக் கொள்ளும் படியான படைப்புக்கள் எனக்கு கைவர வேண்டும் என்ற முயற்சியிலேயே பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து போகின்றது

said...

மஞ்சூர் ராசா மிக்க நன்றி

said...

//இதே போன்ற நல்ல கவிதைகளுடன் இந்த வலைப்பூவைத் தொடர வாழ்த்துகிறேன்.//

ஐயோ...இனிம கவிதை எழுதவே பயமாய் இருக்கு... :)

said...

நல்ல கவிதை.தொடர வாழ்த்துகிறேன்.

said...

மது வாழ்த்துக்களுக்கு நன்றி

My Blog List